-மன்னார் நகர் நிருபர்-
தேசிய நத்தார் விழா நிகழ்வு இம் முறை மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை(4) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இமானுவேல் அமரதுங்க, கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதேசச் செயலாளர்கள், பிரதேச சபை, நகர சபையின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கத்தோலிக்க குருக்கள் உள்ளடங்களாக பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தேசிய நத்தார் தின நிகழ்வு இம்முறை மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கலந்து கொள்ள உள்ளதோடு,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய நத்தார் தின நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக தேசிய நத்தார் தின நிகழ்வு இடம் பெறவுள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானம் தொடர்பாகவும்,ஏனைய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
நாத்தருக்காக நடாத்தப்படுகின்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்ள மறைமாவட்ட ஆயர்கள்,குருக்கள் என பல தரப்பட்டவர்கள் மன்னாரிற்கு வருகை தர உள்ளனர்.இந்த நிலையில் குறித்த நிகழ்வுக்கான சகல விதமான ஏற்படுகள் குறித்தும் ஆராய்வதற்காக குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



