ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோஹ்லி மற்றும் ஜடேஜாவின் அபார சதத்தின் உதவியால் இந்திய அணி 649 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.
அதன்படி, இந்திய அணியில் அறிமுக வீரரான பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ராகுல் தான் சந்தித்த 4வது பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா, பிரித்வி ஷாவுடன் இணைந்து ஓட்டங்களை குவித்தார்.
பிரித்வி ஷாவுக்கு முதல் டெஸ்ட் என்றாலும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அரைசதம் கடந்த புஜாரா 86 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, பிரித்வி ஷாவும் 134 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் கோஹ்லி-ரகானே கைகோர்த்தனர். ரஹானே 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். எனினும் அரைசதம் கடந்த விராட் கோஹ்லி 72 ஓட்டங்களுடனும், ரிஷப் பண்ட் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ஓட்டங்கள் குவித்தது.
இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டம் துவங்கியபோது, நிதானமாக விளையாடி கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் தனது 24வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ரிஷாப் பண்ட் அதிரடி காட்டினார்.

சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய பண்ட் அரைசதம் கடந்தார். ஆனால், அவர் 92 ஓட்டங்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜடேஜா களம் இறங்கினார். ஜடேஜாவும் அதிரடியில் இறங்க, அணியின் ஸ்கோர் 534 ஆக உயர்ந்தபோது கோஹ்லி 139 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தொடர்ந்து அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா 132 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களுடனும், ஷமி 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
