நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் பாரிய சக்தி விவசாயிகளிடமுள்ளது – காதர் மஸ்தான்

165

 

நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் பாரிய சக்தி விவசாயிகளிடமுள்ளது – காதர் மஸ்தான்

நாடு தற்போது பலவேறான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளதை யாவரும் அறிவோம். அதனைத் தடுப்பதற்காக பலவேறான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது எனினும் நிரந்தரமான நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் பாரிய சக்தி விவசாயிகளிடமுள்ளது என மீள்குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பை மடு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கமநல சேவைகள் திணைக்களத்தை இன்று (05) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை நாடானது விவசாயத்தால் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாடாகும், ஆனாலும் இன்று நாங்கள் அண்டை நாடுகளிடமிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றோம்.

எமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று மார்தட்டி கூறினோம், அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பொழுது ஏனைய நாடுகளுக்குத் தானிய வகைகளை அனுப்பி உதவி இருக்கின்றோம் என்றாலும் இப்பொழுது நமது நிலையே கவலைக்கிடமாக உள்ளது.

இப்பொழுது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இந்த நிலை தொடருமாக இருந்தால் நம்மை விடுத்து எதிர்காலத்தில் நமது சந்ததியினரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்.

ஆனால் இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு விவசாயிகளாகிய உங்களிடமே இருக்கின்றது. மீண்டும் நீங்கள் விவசாயத்தை ஒரு முழுநேர தொழிலாக செய்து அதன்மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதுடன் விவசாயத்தின் மூலமான ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நமது நாட்டைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து காக்க முடியும் என நினைக்கின்றேன்.

இதற்கு குறுகிய காலம் ஆனாலும் நாடு தன்னிறைவடையக்கூடிய நிரந்தர தீர்வு விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலமே சாத்தியமாகுமென நான் கருதுகின்றேன். வடக்கு கிழக்கு மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகச் செய்துவருகின்றார்கள் அந்தவகையில் இங்கு வந்திருக்கும் கௌரவ கமத்தொழில்சார் அமைச்சர் அவர்களே எமது இந்த விவசாயிகளுக்கு மேலதிகமாக ஏதேனும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி எமது மக்களின் வாழ்வியலை முன்னேற்ற உதவுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

தற்காலத்தில் எமது மக்கள் வானத்தைப் பார்த்து விவசாயத்தை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனும் இப்பிரதேசத்தில் குறைந்த நீரைக்கொண்டு விவசாயம் மேற்கொள்ளும் முறைகளை அறிமுகம் செய்து அவற்றுக்கான உதவிகளையும் தங்களது அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் பெற்றுக்கொடுத்து அதனூடாக எல்லாக்காலங்களிலும் இந்த மக்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ற சூழலொன்றை உருவாக்கித்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அது மாத்திரமில்லாம் எமது அரசாங்கமும் பல சவால்களுக்கு மத்தியில் விவசாயத்தை முதன்மைப்படுத்திய பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன் மேலும் எதிர்காலத்திலும் அதிகமான மக்கள் பயனடையக்கூடிய செயற்றிட்டங்களைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாகவே பம்பைமடு விவசாயிகளின் நலன் கருதி இந்த கமநல சேவைகள் திணைக்களத்தை இன்று உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். இதனூடாக நாங்கள் எதிர்பார்ப்பது விவசாயத்தினுடான தன்னிறைவை மாத்திரமேயாகும்.

எதிர்காலத்தில் இந்த பகுதி விவசாயிகள் நாட்டுக்கே ஒரு முன்மாதிரியான விவசாயத்தால் தன்னிறைவடைந்தவர்காளாக மிளிரவும் அதற்காக இந்த திணைக்களத்தை நல்ல முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அதன் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபதி எஸ்.எம். ஹனீபா உட்பட அரச உயர் அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர்கள் கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

SHARE