டயலொக் சம்பியன் லீக் முதலாவது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவு

146

13 ஆவது டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டியில் ஆடிய பேருவளை சுப்பர் சன் மற்றும் வெண்ணப்புவ நிவ் யங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி 1-−1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் நிறைவு பெற்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் வெண்ணப்புவ அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பேருவளை சுப்பர் சன் அணி ஒரு கோலை போட்டு போட்டியை சமன் செய்தது.

யாழ். துரையப்பா அரங்கில் இடம்பெறும் முதலாவது டயலொக் சம்பியன் லீக் போட்டி என்பதால் ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் போட்டியைக் காணவந்திருந்தனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் போடுவது பெரும் சிரமமாக ஒரு கட்டத்தில் காணப்பட்டது.

இந்த ஆட்டத்தில் போட்டி ஆரம்பித்த 22 ஆவது நிமிடத்தில் வெண்ணப்புவ நிவ் யங்ஸ் அணிக்காக ஆடும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நிமோ தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலை போட்டார். எனினும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக பேருவளை சுப்பர் சன் வீரர் ஓ.டேனியல் போட்டியின் 78 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை போட்டு போட்டியை சமன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

சம்பின் லீக் ஆரம்ப போட்டிக்கு பிரதம அதிதியாக யாழ்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்டதுடன்.டயலொக் ஆசியாட்டாவின் பொது முகாமையாளர் (புரோட்பேன்ட்) திமுத் குரே, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மொத்தமாக 153 மோதல்கள் இடம்பெறவுள்ள இந்த பருவகாலப் போட்டிகளுக்காக 60 போட்டி மத்தியஸ்தர்களும், 30 போட்டி ஆணையாளர்களும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 3 பருவங்களாக தொடர்ச்சியாக கொழும்பு கால்பந்து கழகமே டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடம்பெறும் சம்பியன் லீக் போட்டியில் கொழும்பு விளையாட்டுக்கழகம், றினோன் வி.கழகம், நிவ் யங்ஸ், சுப்பர் சன், பெலிக்கன்ஸ், விமானப்படை, மாத்தறை வி.கழகம், இலங்கை இராணுவ அணி, அப் கன்றி லயன்ஸ், சோன்டர்ஸ் கழகம், கடற்படை அணி, புளுஸ்டார் கழகம், நிகம்பு யூத் அணி, ரெட்ஸ்டார், கிரிஸ்டல் பலஸ், ரத்னம் கழகம் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. லீக் போட்டிகள் எதிர்வரும் வாரங்களில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். கடந்த முறை இடம்பெற்ற சம்பியன் லீக் ஆட்டத்தில் ரினோன் கழகம் இரண்டாம் இடம்பெற்றது.

SHARE