இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென்போக்ஸ் சதமடித்துள்ளார்.
காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்டில் அவர் சதம் பெற்றுள்ளார்
இரண்டாவது நாளான இன்று பென்போக்ஸ் 202 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி திணறிக்கொண்டிருந்தவேளை அவர் சாம் குரான் அடில் ரசீட் ஆகியவர்களுடன் இணைந்து இங்கிலாந்து அணியை பலப்படுத்தினார்.
சாம் குரானுடன் இணைந்து 88 ஓட்டங்களை பெற்ற பென்போக்ஸ் பட்லருடன் இணைந்து 61 ஓட்டங்களையும் அடில் ரசீத்துடன் இணைந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
முதல் நாள் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக பட்லருடன் இணைந்து போக்ஸ் முதிர்ச்சியையும் நிதானத்தையும் வெளிப்படுத்தியதுடன் ஓட்டங்களை மெதுமெதுவாக பெறத்தொடங்கினார்.
அவர் தனது 44 பந்திலேயே முதல் பவுன்டரியை பெற்றார்.
பென்போக்சின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்சில் 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தனது முதல் டெஸ்டில் சதம்பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்க்காக முதல் டெஸ்டில் சதம் பெற்ற விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் பென் போக்ஸ் இணைந்துகொண்டுள்ளார்.
இதேவேளை தனது இனிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்போக்ஸ் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக்கின் வீடியோ செய்தியொன்றே தனக்கு உத்வேகத்தை அளித்தது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான வீடியோ செய்தியை வெளியிடுமாறு குக்கிக்கிற்கு தெரிவித்தது யார் என்பது தெரியாது ஆனால் அது மிகச்சிறந்ததாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் அதனை பார்த்தோம் உத்வேகம் பெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.