வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை மக்கள் மீள்குடியேறிய போதும் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காஞ்சிராமோட்டை மற்றும் அதனை அண்டிய காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை போன்ற கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு முதல் 300 குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தனர்.
1987ஆம் ஆண்டு ஏற்பட்ட அசதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் காணாமல் போயினர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும், வேறு பிரதேசங்களுக்கும் நகர்ந்து சென்றனர். இன்னும் சிலர் இந்தியாவும் அகதிகளாக சென்றிருந்தனர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முதல் கட்டமாக 9 குடும்பங்கள் குடியேறினர். அதில் 6 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் 3 குடும்பங்கள் தொடர்ந்தும் வசித்து வந்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 38 குடும்பங்கள் காஞ்சிரமோட்டை மற்றும் அதன் அயல் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் காட்டு மிருகங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இம் மக்கள் போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள் என எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காட்டு விலங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் கூட சுமார் 12 கிலோமீற்றர் தூரத்திற்கு நடந்து சென்றே தமது கல்வியைத் தொடருகின்றனர். அத்துடன், நீண்டகாலமாக அம் மக்கள் இக் காணிகளில் வசிக்காமையால் அவை மரங்களாலும், புதர்களாலும் நிறைந்து காடுகள் போல் காட்சியளிக்கின்றது.
அவற்றை துப்பரவு செய்து அக் காணிகளில் மக்கள் குடியேறுகின்ற போது வன இலாகா திணைக்களம் அம்மக்களின் காணிகளை வன இலாகாவிற்கு சொந்தமானது என தெரிவித்து அவர்கள் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க மறுத்து வருகிறார்கள்.
அம் மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் பல இருந்தும் வன இலாகா அதிகாரிகள் அம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இம் மக்களுக்கான தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டு தற்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 5 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்ட போதும் அந்த வீட்டினை கட்டி முடிக்க முடியாத வகையில் வன இலாகாவினர் செயற்படுகின்றனர்.
இதனால் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பாடசாலை செல்லும் சிறுவர்கள், கைக்குழந்தைகளுடன் கொட்டும் மழைக்கு மத்தியில் இம் மக்கள் தற்காலிக குடிசைகளில் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை, இம்மக்களினுடைய மீள்குடியேற்றப் பிரச்சனை தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டதுடன், பல்வேறு அரசியல்வாதிகளும் குறித்த பகுதிக்கு சென்று மக்களினுடைய பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமை குறிப்பிடத்தக்கது.