திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி முதலியார் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மொறவெவ, குணவர்தனபுர சாதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான சமந்த சில்வா (34 வயது) அவரது மனைவியான அனூஷா டில்றுக்சி (26 வயது) மற்றும் பிள்ளைகளான மின்சர (09 வயது) சாரணி (03வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மொறவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேன் மோதுண்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, படுகாயமடைந்த நான்கு பேரில் 26 வயதுடைய அனூஷா டில்றுக்சி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் விபத்து சேவைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்துக்குள்ளான வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.