சபை 23இல் கூடும்போது ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு

177

பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கூடும்போது சபை ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்த தரப்பு நேர்மையுடனும், சட்டவரம்புக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் நடந்துகொண்டால் நாமும் ஒத்துழைத்துச் செயற்படத் தயாரென ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. நாம் ஒருபோதும் சபையில் முறைகேடாக நடந்துகொள்ள முற்படவில்லை. மூன்று நாட்களும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரேயாகும். அவர்களை கட்டுப்படுத்த மஹிந்த தவறி விட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளிக்கிழமை அவர்கள் நேர்மையாக நடந்துகொள்வார்களா? என்பது கூட சந்தேகமானதாகும். அவர்களிடம் 113 பெரும்பான்மையைக் காட்ட முடியாது என்பதாலேயே குழப்பம் விளைவிக்கின்றனர். 113 பெரும்பான்மையை அவர்கள் காட்டுவார்களானால் அடுத்த நிமிடமே நாம் எதிரணித் தரப்புக்கு மாறுவோம். பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணிச் செயற்பட நாம் தயார்.

மஹிந்த தரப்பினர் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சபாநாயகர் மீது ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பழியைப் போட முனைகின்றனர். அந்தச் சம்பவங்களை நாட்டு மக்கள் உடனுக்குடன் நேரடியாக கண்டுகொண்டனர். நாட்டு மக்களை குருடர்களாக நினைக்கின்றார்களா? எனக் கேட்கவிரும்புகின்றேன்.

ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கூடும்போது பாராளுமன்ற ஒழுங்கு முறையை பேண நாம் தயாராகவுள்ளோம். இத் தரப்பினருக்கும் பெரும்பான்மையை காட்டுவதற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்குவோம். முடிந்தால் அதனை நிரூபித்துக்காட்டலாம். முடியாது போனால் பாராளுமன்ற விதிமுறைகளுக்கமைய எம்மிடம் பொறுப்பைத் தந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னுமொரு விடயத்தை இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம். தேர்தலொன்றுக்குச் செல்லவும் நாம் தயாராகவே இருக்கின்றோம். அது பாராளுமன்றத்துக்கான தேர்தலாக மட்டும் இருக்க முடியாது. ஜனாதிபதி பதவி விலகி ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் சமகாலத்தில் நடத்தினால் தான் நீதி நிலைநாட்டப்பட முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுடன் மோதிக்கொள்வதற்காக நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார். பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவே உள்ளோம் என்றார்.

SHARE