நகர சபை அமர்வில் தொலைபேசியால் வந்த சர்ச்சை

118
மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வு  புதன் கிழமை (21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த அமர்வில், நகர சபையின் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைவர் சபையை தொடர்ந்து நடாத்திக்கொண்டு சென்ற போது சபை உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.
சபையில் உள்ள உறுப்பினர்கள் எவரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் சபை உரையாடல்களை ஒலிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்ததோடு, அத்து மீறி ஒலிப்பதிவு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதன் போது எழுந்த நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் செல்வக்குமரன் டிலான் ஆகியோர் எழுந்து நாங்கள் சபையில் ஆற்றுகின்ற உரையை ஒலிப்பதிவு செய்ய ஏன் முடியாது என வினா எழுப்பினர்.
இதன் போது பதில் வழங்கிய நகர சபை தலைவர் சபை அமர்வுகளின் போது உறுப்பினர்கள் ஒலிப்பதிவு செய்ய முடியாது. அதற்கான காரணத்தை எழுத்து மூலம் வழங்க முடியும்.
இனியும் ஒலிப்பதிவு செய்தால்  அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளுவோம் என தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் எழுத்து மூலம் தரும் வரை நாங்கள் ஒலிப்பதிவுசெய்வோம் என கூறி அமர்ந்தார்.
இதன் போது எழுந்து கருத்து தெரிவித்த நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் சபையில் ஒலிப்பதிவுசெய்தால் என்ன தண்டனையோ அதனை வழங்குங்கள்.அதனை ஏற்க நான் தயார் என கூறி அமர்ந்தார்.
 எனினும் சில உறுப்பினர்களுக்கும்  சபையின் தலைவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கருந்து முரண்பாடு ஏற்பட்டதோடு, பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அமர்வு நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE