இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு வெற்றியாவது பெற்றுவிடும் என்று எதிர்பார்த்தால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 336 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்சில் ஜானி பெர்ஸ்டோவ் சதம் அடித்து 110 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணி டிமுத் கருணரத்னே(83) மற்றும் தனஞ்சய டி சில்வா(73) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சொதப்ப, இலங்கை முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அதன் பின் 96 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 230 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் தில்வருன் பெரேரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியை நிலை குலைய வைத்தார். 327 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடி வருகிறது.
எப்படியும் எட்டக் கூடிய இலக்கு தான், இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டத்தின் சற்று முன் வரை இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இன்னும் அணியின் வெற்றிக்கு 195 ஓட்டங்கள் தேவை, மீதம் 5 விக்கெட்டுகளே உள்ளதால், இலங்கை அணி தோல்வியை சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது