பிரபல பாதாள உலகத் தலைவர்களாக கருதப்படும் ஹபரகட வசந்த, மீகொட உப்புல் ஆகியோர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொட்டாவ பொலிஸ் பிரிவு பாதாள உலக உறுப்பினர்கள் குறித்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக அதன் விசேட அதிரடிப்படை பிரிவு அங்கு சென்ற போது பொலிஸார் மீது பாதாள உலகத்தவர்கள் நடத்திய தாக்ககுதலை தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் அவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொட்டாவ பொலிஸ் பிரிவின் ருக்மல்கம வீதியின் அதிவேக பாதை மேம்பாலத்துக்கு கீழே இந்த துப்பாக்கிச் சமர் நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள ஹபரகட வசந்த, மீகொட உப்புல் ஆகியோர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரேயே உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஹபரகட வசந்த, மீகொட உப்புல் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நவீனரக இயந்திர துப்பாக்கி மற்றும் மைக்ரோ கைத்துப்பாக்கி ஆகிய மீட்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் இயந்திர துப்பாக்கியுடன் மாத்தறை நகரில் நகைக் கடை ஒன்றினை கொள்ளையிட்ட சம்பவத்திலும் ஹபரகட வசந்த பிரதான சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.