பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசியதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், தொகுப்பாளினி ஒருவரின் ட்வீட் அசாமிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அவர் 127 ஓட்டங்கள் எடுத்து நாட்-அவுட் ஆக இருந்தார். இதனால் பலரும் பாபருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினியான சைனாப் அப்பாஸ் என்பவர், பாபரின் சதத்தை பாராட்டி பதிவிட்ட ட்வீட் கொஞ்சம் எல்லை மீறியதாக இருந்தது.
அதாவது, அவர் தனது ட்வீட்டில் ‘நன்றாக ஆடினீர்கள் பாபர் அசாம். மிக்கி ஆர்தர் தன் மகனின் சதத்தை கொண்டாடியபோது, மற்ற வீரர்கள் வாழ்த்தியதை ரசித்தேன்’ என பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தானின் பயிற்சியாளராக இருப்பவர் மிக்கி ஆர்தர். அந்த அணிக்காக சிறப்பான பயிற்சியை அளித்து வரும் இவர், ஒரு பயிற்சியாளராக பாபர் அசாமின் சதத்தை கொண்டாடினார். ஆனால், அதனை தனது மகனின் சதத்தை கொண்டாடியதாக சைனாப் அப்பாஸ் கூறியது பாபர் அசாமிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாபர் அசாம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொகுப்பாளினி சைனாப் அப்பாஸிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘எதையாவது கூறும் முன் யோசியுங்கள். எல்லையை மீறாதீர்கள்’ என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.