பக்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் 21 பேர் கைது

114

மலேசியாவில் அமைந்துள்ள ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். .

மலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான  இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தி இருந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றில் நடந்து வரும் நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது.

பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு மிரட்டி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் சிலருக்கு இரத்தக் காயங்கள் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு வழக்கு தொடர்ந்திருக்கும் கட்டுமான நிறுவனம்தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள தைரியமின்றி அந்த நிறுவனத்தினர் கூலிப்படையை ஏவி இந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதைதொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இன்று காலை சிலர் அந்த கட்டுமான நிறுவன அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு நின்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் மதமோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செலாங்கோர் நகர பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் சுமார் 700 பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

SHARE