நினைவில் நிற்கவேண்டியது இனப்படுகொலை மட்டுமல்ல, வீரஞ்செறிந்த விடுதலையுத்தமும்கூட

135

 

ஒரு கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்கள் தங்களுடையை விடுதலைக்காக போராடினார்கள். ஒரு மிகப்பெரிய விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பினார்கள். இந்த உலகமே ஒன்று சேர்ந்துதான் அழித்தாகவேண்டும் என்கிற அளவுக்கு அது வலிமையானதாக இருந்தது. பல நூற்றாண்டுத் தாகத்தை புலிகள் தங்களுடைய தாகமாக வரித்துக்கொண்டிருந்தார்கள். பெருஞ்சித்திரனார் ஒரு முறைக் குறிப்பிட்டதுபோல, ஈராயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போல ஒருவன் பிறந்ததில்லை.

அந்த மகத்தான இயக்கத்தின் போர்களைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும், நினைத்தவாறே இருக்கவேண்டும். புலிகளின் வியூகங்களைப் பற்றியும் அற்புதமான சமர்க்களக் கதைகள் பற்றியும் நாம் இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கவும் நண்பர்களோடு உற்சாகமும் ஆச்சரியமும் மிகுந்த உணர்வோடு கலந்துரையாடவும்வேண்டும். கரும்புலிகளைப் பற்றி, முப்படைகளைப் பற்றி, எதிரிகளை துவம்சம்செய்த தளபதிகளைப் பற்றி, எத்தனை எத்தனையோ சமர்களில் சிங்களப் படைகளை புறமுதுகிட்டோடச் செய்த்தைப் பற்றி, இந்திய அமைதிப்படையை துவட்டி எடுத்ததைப் பற்றி, வன்னிக்காட்டில் விமானங்களைச் செய்த்தைப்பற்றி…

சிவக்குமாரன் பற்றி, சார்லஸ் ஆன்டனி பற்றி, மில்லர் பற்றி, திலீபன் பற்றி, பால்ராஜ் பற்றி, சூசை பற்றி, கிட்டு பற்றி…

நினைத்து நினைத்து ஆச்சரியப்படுதவற்கும் வியப்பதற்கும் தோள்தட்டுவதற்கும் முகம் நிமிர்ந்து நிற்பதற்கும் எத்தனையோ விட்டுச்சென்றிருக்கிறார்கள் புலிகள். அது ஒரு வீர சகாப்தம். அவர்கள் எப்படித் தொடங்கினார்கள், எப்படி வளர்ந்தார்கள், ராணுவியலர்கள் ஆச்சரியப்பட்டு திகைத்து நின்ற அந்த சமர்களையெல்லாம் எப்படி செய்தார்கள். அதே சமயம் அதே ராணுவ நிபுணர்களின் புருவங்களை உயர்த்திய அந்த பாரிய பிழைகளை எப்படி புரிந்தார்கள், எப்படி அந்த பிழைகளிலிருந்து மீண்டார்கள், எப்படி மீளாமுடியாமலும் போனார்கள், எப்படி வெற்றுக்காற்றிலிருந்து ஒரு வியூகத்தை உருவாக்கினார்கள் .. இவற்றையெல்லாம் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

அவர்கள் ஆயுதங்களை உலகெங்கிலுமிருந்து தருவித்த கதைகள் காமிக்ஸ் கதைகளைப் போல இருக்கும். அதை நினைத்து வியந்துநிற்கவேண்டும். அவர்கள் சிறு சிறு அணிகளாக எழுந்து, தோழமை பூண்ட குழுக்களாக படை நகர்த்தி, எதிரிகளை பந்தாடினார்களே அதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும். அவை நமது விழிகளை நனைக்கும் கதைகள். போர்வீரனின் பாடல்கள் எத்தனை எத்தனை. விடுதலைப் பறவைகளின் வீரம் எத்தனை எத்தனை. பெண்களின் சமூக உறவை மாற்றிய அந்த சாதனைகள் எவ்விதம் சிறப்புடையது!
நமது விடுதலைப் போராட்டத்தை கலை இலக்கியங்களினூடாக வரலாற்று நூல்களினூடாக கடத்துங்கள். சோவியத் யூனியன் தன் புரட்சிகர வரலாற்றையும் இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்கதைகளையும் எத்தனை இலக்கியங்களாக நமக்கு அளித்தது!

அதைப்போல புலிகளின் சமர் குறித்து புதிய கதைகளையும் நூல்களையும் எழுதுங்கள். ஓவியம் தீட்டுங்கள். புலிகளின் ராணுவ அறிவின் வீச்சும் வரம்பும் பற்றி எழுதுங்கள். அலசுங்கள். குழந்தைகளும் பெரியவர்களும் விடுதலைப்போரில் பங்கேற்ற மாவீரர்களின் கதைகளை அறியட்டும்.

அவர்கள் படைகளில் மட்டுமா அறிவாளர்கள்? அவர்கள் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்கள். வன்னிக்காடுகளில் எதிர்கால ஈழம் பூத்திருந்ததே! நமக்கென தலைவன், நமக்கென நாடு, நமக்கென ராணுவம், நமக்கென அதிகார வர்க்கம் இருந்ததே. வங்கிகளும் கரன்சியும் போக்குவரத்தும் வரியும் சட்டமும் என நமக்கென ஒரு நாடு கருத்தரித்து இருந்ததை நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். பூத்திருந்த ஈழதேசத்துக்கென கல்வி வாரியம் இருந்தது, சுகாதார வாரியம் இருந்தது, வானொலி நிலையம் இருந்தது., தொலைக்காட்சி நிலையம் இருந்தது, ஏகப்பட்ட பத்திரிகைள் நடத்தப்பட்டன..
உலகின் முதல் முப்படை விடுதலை ராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் வெறும் படை நடத்தமட்டுமே தெரியும், அவர்கள் வியூகம் விவேகம் அற்றவர்கள் என்று எத்தனை எத்தனை பொய்ப்பிரச்சாரங்கள் இந்த நிமிடம் வரை செய்யப்பட்டுவருகிறது என்பதை யோசித்துப்பாருங்கள். பிரபாகரனுக்கு போர்வியூகம் அமைக்கத்தான் தெரியும், சமூகத்தைப் பற்றி என்ன தெரியும் என்று எத்தனை கதைவிடல்கள்!

அங்கே பல நூற்றாண்டுகால சமூகப் பிரிவினைகள் மீது இடியென விழுந்த புதிய முறைமைகளைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். அதைப் பற்றி எழுதுங்கள். புலிகளின் நிர்வாகவியல்பற்றி எழுதுங்கள். புலிகளின் வங்கி எப்படிச் செயல்பட்டது? எழுதுங்கள். புலிகளின் செஞ்சோலைகள் பற்றி? எழுதுங்கள். புலிகள் சுனாமியை எப்படி எதிர்கொண்டார்கள். எழுதுங்கள். புலிகளின் ராஜதந்திர நடவடிக்கைகள்? அலசுங்கள். புலிகளின் பிழைகள்? ஓ, அதைப்பற்றியும் காய்தல் உவத்தலின்றி எழுதுங்கள், உரையாடுங்கள். நமது புலிகளைப் பற்றி நாம் ஆராயாமல் யார் ஆராய்வார்களாம்?

புலிகள் என்ன தேவதூதர்களா? வேறெங்காவது விடுதலைக் கிரகத்தில் பிறந்து பூமிக்கு வந்து உதித்தவர்களா? இந்தத் தமிழ்ச்சமூகத்திலிருந்து உதித்தவர்கள்தானே! இதனுடைய சாதக பாதகங்களோடுதானே அவர்களும் இருந்திருக்கமுடியும்? அவர்கள் பிழை நமது பிழை அல்லவா? ஆனால் அவர்கள் தங்கள் கண்முன்பாக ஒரு சுதந்தர நாட்டின் காட்சியை உருவகித்து உங்களுக்குக் காட்டினார்கள்தானே! ஒரு தலைமுறை ஈழத்தமிழர் அதைப் பார்த்திருந்தார்கள்தானே! அதெல்லாம் பழங்கதையாகிவிட்டனவோ..

-ஆழி செந்தில்நாதன்

SHARE