தனது அனுமதி இல்லாமல் தன்னுடைய பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதற்காக, ராஷ்ட்ரிய லோக் தந்ரிக் கட்சியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய தந்ரிக் கட்சியானது, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேவாக், மிகுந்த கோபமடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
‘பொய்யர்களுக்கு எச்சரிக்கை, நான் துபாயில் இருக்கிறேன். எந்த விதமான கட்சியினருடனும் நான் எந்த தொடர்பும் வைக்கவில்லை. இந்தப் பொய்யர்கள் சிறிதுகூட வெட்கம் இல்லாமல், எனது பெயரைப் பயன்படுத்தி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். மக்களை ஏமாற்ற என் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். ஆட்சிக்கு வருவதற்காக மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள். பொய், வஞ்சம் ஆகியவற்றைக் காட்டிலும் மற்றவை அனைத்தும் சிறந்தது’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சேவாக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது துபாயில் நடைபெற்று வரும் டி10 போட்டியில், மராத்தா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக சேவாக் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
LIAR ALERT?
I am in Dubai & have had no communication with any of these guys.
When these Liars can shamelessly lie in the name of their campaign & try to fool people,wonder how much they will fool people if by any chance they come to power.
Anything is better than deceit & lies pic.twitter.com/uAgHozDwxH— Virender Sehwag (@virendersehwag) December 1, 2018