வவுணதீவில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸார் குத்தியும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டு அவர்களது ஆயுதங்கள் அபகரிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியான விசாரணைகளில் ஒன்றாக இன்று வவுணதீவு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் வீடு வீடாகச் சென்று புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பில் ஈடுபட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களினதும் அதற்கு முந்திய காலத்தில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களினதும் வீடுகளுக்கு விசேட அதிரடிப்படையினர் சென்றதோடு முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ளவர்கள் வீட்டிலிருக்கின்றார்களா அவ்வாறில்லையெனில் அவர்கள் தற்போது வதியும் அல்லது தொழில் புரியும் இடங்களின் சரியான விவரங்களையும் தருமாறு வீட்டிலிருப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தத் தேடுதலும் விசாரிப்பு நடவடிக்கைகளும் கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் ஏதுமில்லாத வகையில் சுமுகமாக இடம்பெற்று வருவதாகவும் பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுணதீவு வாவிக்கருகேயுள்ள பொலிஸ் காவற் சாவடியில் இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கடற்படையினர் மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான இராஜநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயது நபர் விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் அவர் மூலம் பல விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.