அதிகரித்துவரும் கையடக்கத்தொலைப்பேசி கொள்ளைகள் தொடர்பில் விரைவாக முறைப்பாடளிப்பதற்காக உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள் குறித்த விபரங்களை www.ineed.police.lk என்ற முகவரியில் உள்ள இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 24 மில்லியனுக்கும் அதிகமான தொலைப்பேசிகள் பாவனையில் உள்ளன. இவற்றின் ஒரு நாளுக்கு 800 தொடக்கம் 1000 வரையிலான தொலைப்பேசிகள் திருட்டு போதல் அல்லது காணாமல்போதல் தொடர்பான முறைப்பாடுகள் நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் முறையிடப்படுகின்றன.
இவற்றை கவனத்தில் கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கிய ஆலோசனையின் கீழ் பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவினூடாக இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் www.ineed.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளமொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ்விணையத்தளத்தினூடாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளால் விரைவாக குறித்த பொலிஸ் நிலையங்களுக்கும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கும் மற்றும் உரிய தனியார் தொலைத்தொடர்புகள் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்படும். இதனூடாக துரிதகதியில் இலகுவாக முறையிடவும், விசாரணைகளை முன்னெடுக்கவும் இயலுமானதாக அமையும்.