பிரதமராகவும் அமைச்சர்களாகவும் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இன்றைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதில்லை என்றும் இன்று காலை சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நேற்று மாலை அவசரமாக நடைபெற்றது. மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் சுமார் 90 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் எனக்கருதப்படும் துமிந்த திஸாநாயக்க மற்றும் விஜித் விஜிதமுனி சொய்சா உள்ளிட்ட எம்.பி.க்களும் இதில் கலந்துகொண்டனர். இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக பாராளுமன்றக் கலைப்புத் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து பேசப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தைக் கலைத்தமை சரியானது அல்லது தவறானது என்று தீர்ப்பு வந்தால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டிருக்கிறது.
இதன்போது மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் பல யோசனைகளை முன்வைத்திருக்கின்றனர். அப்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அது தொடர்பில் தற்போது ஆராய வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வந்தவுடன் அது குறித்து ஆராயலாம் என்றும் கூறியிருக்கிறார். எவ்வாறெனினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு அணியாக செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இன்றைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. அதில் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கக் கூடாது என்ற அதிகமான எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அது தொடர்பில் நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னர் இன்றைய பாராளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றும் காலையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லை என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டிருக்கிறது.
இதன்போது மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குறித்த பதவிகளை வகித்த 49 பேரும் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோ விரான்டோ மனு தொடர்பிலேயே இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் நீதிமன்றததில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள நி்லையில் ஆஜராகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற கலைப்பு விவகாரம் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படாமலுள்ள நிலைமை ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது. இதன்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருக்கிறார்.
குறிப்பாக மத்திய வங்கி ஊழல் விவகாரம் தொடர்பில் தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி கடந்த மூன்றரை வருட காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஆராய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இந்தக் கூட்டத்தின் போது தெரிவித்திருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்து ஸ்திர அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.