அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடையில் உள்ள நிலையில், தற்போதைய அவுஸ்திரேலிய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினர். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பேன்ஃகிராப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.
அப்போது, தான் ஒரு கேப்டனாக தோற்றுவிட்டதாகவும், தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஸ்மித் உருக்கத்துடன் தெரிவித்தார்.
ஸ்மித் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஸ்மித் மீதான தடை விலகுவதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் மற்றும் ஆஷஸ் தொடர்களில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தடை விலகுவது குறித்து ஸ்மித் கூறுகையில்,
‘நான் ஒவ்வொரு நாளையும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கைக்குரிய வகையில் என்னை தயார் செய்து மற்றொரு வாய்ப்பை பெற்று அவுஸ்திரேலிய அணியில் விளையாட என்ன தேவை என்பதை நான் செய்துகொண்டிருக்கிறேன்.
உலகக் கிண்ணம் மற்றும் ஆஷஸில் அது இருக்கும். நம்பமுடியாத வகையில் விரோதமான ஆங்கில கூட்டம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது நடந்தால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த சில போட்டிகள் அணிக்கு கடினமான நேரமாக இருந்தது. குறிப்பாக, வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.அதனைப் பார்த்துக் கொண்டும், தெரிந்து கொண்டும் என்னால் அவர்களுக்கு சென்று உதவ முடியால் போனது கடினமாக இருந்தது.
ஆனால், கடந்த வாரம் பெர்த்தில் அவர்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர்கள் அற்புதமானவர்கள் என்று நினைக்கிறேன். கேப்டனாக பொறுப்பேற்ற டிம் பெய்ன்னின் தலைமை விதிவிலக்கானது என நான் நினைக்கிறேன். அவர் கடினமான சந்தர்ப்ப சூழல் நிலைகளை எதிர்கொள்கிறார். மேலும் பயங்கரமான வேலையை செய்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.