மெல்போர்ன் டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர் புஜாரா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதத்தை விளாசியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 8 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் சுதாரித்து ஆடிய அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 76 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி நிதான ஆட்டத்தை கையாண்டார்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்திருந்தது. புஜாரா 68 ஓட்டங்களுடனும், கோஹ்லி 47 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நிலையில், அவுஸ்திரேலியா மீண்டும் தாக்குதலை தொடர்ந்தது. எனினும், அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை விளாசினார்.
விராட் கோஹ்லியும் சிறப்பாக விளையாடிய நிலையில், ஸ்டார்க் வீசிய பந்தை ஆப் சைடு திசையில் தூக்கி அடித்தபோது பின்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 204 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் 319 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 10 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்களில் அவுட் ஆனார். இந்திய அணி தற்போது வரை 5 விக்கெட் இழப்புக்கு 379 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ரஹானே 34 ஓட்டங்களில் அவுட் ஆனார். ரோஹித் ஷர்மா 38 ஓட்டங்களுடனும், பண்ட் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.