ஊழல் விபரங்களை வெளியிடும் இலங்கை வீரர்களுக்கு பொது மன்னிப்பு

283

கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புக் காலம் வழங்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி அலெக்ஸ் மார்ஷலை கடந்த 27ஆம் திகதி சந்தித்தபோது இந்தத் தகவலை அவர் அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக தாங்கள் அறிந்த விடயங்களையும் தங்களால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்களையும் இலங்கை வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவினரிடம் அறிவிப்பதற்கு ஏதுவாக ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம், பரிசுப் பணம் போன்றவற்றை வழங்குவதில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெரும் பங்காற்றிவருவதால் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் உரிமை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இருக்கின்றது. அதனால்தான் இந்த கால அவகாசத்தை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு முன்வந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவின் நிரந்தர அலுவலகம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடுமையான ஊழல்மோசடிகள் இடம்பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இலங்கை என சர்வதேச கிரிக்கெட் பேரவை தன்னிடம் கூறியபோது இதயம் நொந்துபோனதாக அமைச்சர் கவலை வெளியிட்டார்.

ஸிம்பாப்வேயிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் நிருவாகத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை எனவும் வெளியாரின் தலையீடே அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவைன் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி குறிப்பிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்த மட்டில் மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை மோசடிகள் இடம்பெறுவதாகவும் பாதாள உலகுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் குறப்பிட்டார்.

இதேவேளை இலங்கையில் இடைக்கால கிரிக்கெட் நிருவாக சபை நியமிக்கப்படுமா என அமைச்சரிடம் கேட்டபோது, இது குறித்து சர்வதேக கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழுவிடமிருந்து அனுமதி கிடைக்கும்வரை பொறுத்திருப்பதாகப் பதிலளித்தார்.

அத்துடன் அதி சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள் அனுபவிக்கும் துயரங்களை, கஷ்டங்களை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் வகையில் குறைகேள்  அதிகாரி(ஒம்புட்ஸ்மன்) ஒருவரை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமிக்கவுள்ளார்.

விளையாட்டு வீர, வீராங்கனைகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதே இதன் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் வீர, வீராங்கனைகள் எதிர்நோக்கும் அநீதிகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு நியாயம் வழங்கும் வகையில் தொலைபேசி அழைப்பு நிலையம் ஒன்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நிறுவப்படவுள்ளது.

பல வீர, வீராங்கனைகள் தங்களுக்கு அநீதி ஏற்படும்போது ஊடகங்களை அணுகி தங்களது குறைகளைக் கூறுவதைவிடுத்து விளையாட்டுத்துறை அமைச்சில் அமைக்கபப்படவுள்ள தொலைபேசி அழைப்பு நிலையத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது பிரச்சினைகளை, தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை அறிவிக்க முடியம் எனவும் இதனைமுன்னிட்டு 1978 என்ற தொலைபேசி எண் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

இந்த நிலையத்தில் ஐவர் நியமிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறைகேள் அதிகாரி, தொலைபேசி அழைப்பு நிலைய அதிகாரிகள் ஆகியோர் புதன்கிழமைகள் தோறும் 3 மணி நேரம் கலந்தாலோசித்து குறைகள் மற்றும் அநீதிகளுக்கு தீர்வு காண உதவுவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE