உராங்குட்டான் வகை குரங்கிடம் சிக்கிய இளம்பெண்

184

சுற்றுலா சென்ற ஒரு இளம்பெண், உராங்குட்டான் வகை குரங்கு ஒன்றிடம் சிக்கித் தவிக்கும் திக் திக் நிமிடங்களை அவரது நண்பர் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உராங்குட்டான் வகை குரங்குகளை எப்போதுமே நெருங்கக் கூடாது என்று கூறப்படும் நிலையில், ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரு குரங்கிடம் நெருங்கிச் செல்ல, அந்த குரங்கு அந்த ஆணின் கையைப் பிடித்துக் கொள்கிறது.

பிறகு அவரது கையை விடும் அந்தக் குரங்கு, அவரது அருகில் நின்ற அந்த பெண்ணின் கையைப் பிடித்துக் கொள்கிறது.

குட்டியுடன் இருந்த அந்த குரங்கு அவரிடம் சாப்பிடும் பொருள் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்ததோ என்னவோ, அவரது கையை நக்க முயல்கிறது.

குட்டியுடன் இருக்கும் ஒரு குரங்கை கோபப்படுத்தும் வகையில் ஏதாவது செய்தால், பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தோ என்னவோ அந்த பெண், குரங்கு தன் கையை நக்குவதை தடுத்தாலும், அதனிடமிருந்து தப்ப முயலவில்லை.

அவர் வெளியே சிரித்தாலும், அவரது பயத்தை அவரது முகம் மறைக்கவில்லை. அந்த பெண்ணுடன் இருப்பவர்கள் என்னென்னவோ செய்தும், அந்த குரங்கு அந்த பெண்ணை விடவில்லை.

பின்னர் ஒருவர் ஒரு வாழைப்பழத்தை குரங்கிடம் கொடுக்க, அதன் கவனம் மெல்ல திரும்புகிறது.

என்றாலும் அது அந்த பெண்ணின் கையை விடவில்லை. வெகு நேரம் அவரது நண்பர்கள் ஒவ்வொரு பழமாக கொடுத்து குரங்கின் கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக திசை திருப்புகிறார்கள்.

வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு, ஒருவர் ஒரு பை நிறைய வாழைப்பழங்களை கொண்டு வைக்க, அந்த குரங்கு ஒரு வழியாக அந்த பெண்ணின் கையை விடுகிறது.

தப்பித்தோம் பிழைத்தோம் என அவ்விடம் விட்டு நகரும் அந்தப் பெண்ணைப் பார்த்தால் இனி ஜென்மத்திற்கும் குரங்குகள் இருக்கும் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

SHARE