மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கின்ற அகத்தி முறிப்பு குளத்தின் கீழான விவசாயக் காணி தொடர்பில் அப்பகுதியிலுள்ள இரு சாராருக்கும் இடையில் நீண்ட காலமாக காணிப்பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது.
இப் பிணக்கின்படி 1990 களுக்கு முன்பு ஒருபகுதியினர் அகத்தி முறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொண்டு அதற்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளனர்.
எனினும் மீள்குடியேற்றத்தையடுத்து குறித்த வருடாந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற உரித்தாளிகள் அவர்களது காணிகளை பிரதேச செயலாளரது அனுமதியுடன் சுத்தப்படுத்தச் சென்ற வேளையில் அப்பகுதியில் மீள் குடியேறிய இன்னுமொரு தரப்பினால் தடுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் தீர்க்கப்படாது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சேகு அப்துல் காதர் சாகுல் ஹமீது என்பர் 2016 களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்திற்கு முறையிடப்பட்டது.
இதனையடுத்து ஆணைக்குழுவின் விசாரணைகளையடுத்து குறித்த காணிப்பிணக்கினை மாகாண காணி ஆணையாளரின் உதவியுடன் தீர்ப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போது தொடர்ந்து இக் காணிப்பிணக்கினை தீர்ப்பதற்கான முக்கியமான ஆவணங்களை பிரதேச செயலாளர், காணி உத்தியோகஸ்தர் மற்றும் கிராம அலுவலர் போன்றவர்களிடம் கோரிய போதிலும் இவர்கள் ஆவணங்களை வழங்குவதில் கடுமையாக இழுத்தடிப்புகளை மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.
மேலும் இத்தகைய அரச அதிகாரிகளின் செயற்பாட்டினால் தாம் தொடர்ந்தும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருவதாகவும் இக்காணிப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடும் ஒரு பெரும் காரணமாக இருந்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மற்றும் மன்னார் பிராந்திய அதிகாரிகளை இன்று தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பிணக்கினை தாம் விரைவாக தீர்ப்பதற்கு முயற்சிப்பதாகவும் எனினும் முசலி பிரதேச அதிகாரிகளிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.