3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்ற நியூசிலாந்து அணி

185

நியூசிலாந்துக்கு எதிராக நெல்சனில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சக்ஸன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில்(2), மூன்றோ(21) ஆகியோரின் விக்கெட்டுகளை மலிங்கா கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அரைசதம் அடித்த வில்லியம்சன் 65 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் அதிரடியில் மிரட்டினார். நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய டெய்லர் 131 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 137 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

 

தொடர்ந்து அதிரடி காட்டிய நிக்கோலஸ் 80 பந்துகளில் 3 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை தரப்பில் மலிங்கா 93 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். டிக்வெல்ல 46 ஓட்டங்களும், தனஞ்செய சில்வா 36 ஓட்டங்களும், குசால் பெரேரா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆனால், பின்னர் வந்த குசால் மெண்டிஸ் மற்றும் ஷனகா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திசாரா பெரேரா நியூசிலாந்தின் பந்துகளை அடித்து நொறுக்கினார்.

அணியின் ஸ்கோர் பெரேரா 63 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுப்போல் சரிந்தன.

இதனால் இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 4 விக்கெட்டுகளும், சோதி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது.

 

SHARE