அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நோர்வூட் பிரதேச சபையின் பிரதான உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தை நெறித்து தங்கச்சங்கலியினை அபகரித்துச்சென்ற நபர் ஒருவரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
குறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச்சங்கிலியினை அபகரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கூச்சலிட அட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி மற்றும் பிரதேசவாசிகள் பொலிஸார் ஆகியோர் அவரைத்துரத்திப் பிடித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச்சங்கிலி பறிக்கும் போது பெண்மணியின் கழுத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.
சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும் இவர் கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் அவரை இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.