நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லம் பிட்டிய , முகத்துவாரம் மற்றும் தெவுவன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய – கொடிகாவத்தை மயானத்திற்கு அண்மையில் நேற்று மாலை 5.50 மணியளவில் மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 21 வயதுடைய கொதடுவை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதி மன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே வேளை முகத்துவாரம் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் 51 வயதுடைய மட்டக்குளிய பகுதியை சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்னர்.
மேலும் தெவுவன – நபட சமகிபுர பகுதியில் நேற்று மாலை 5.35 மணியளவில் தெவுவன பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் , 20 வயதுடைய நபட பகுதியை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.