வவுனியா பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்

629
வவுனியா, இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில், 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் நேற்று (திங்கட்கிழமை) இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான ஆவணங்களை உரிமை கோரியவர் வைத்திருந்த போதிலும் காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எவையும் அவரிடம் இருக்கவில்லை.

ஆகையால் ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில், இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பதாக பௌத்த தேரர்களிடம் நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பட்டணசபை செயற்பட்ட காலத்தில் யாத்திரிகை விடுதிக்காக கண்டி வீதியிலுள்ள விகாரைக்கு குறித்த யாத்திரிகை வழங்கப்பட்டிருந்தது.

இதனால், அதனை பராமரித்து வந்த விகாரதிபதி மற்றும் பலர் பௌத்த யாத்திரிகை விடுதியென தற்போது கூறி வருகின்றன. இதனிடையே பல வியாபார நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் அனைத்தும் தற்போது மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, காணிக்கான ஆவணங்களை தயார்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய  தினம் குறித்த காணியின் ஆவணங்களை கோரி, 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் ஒன்றிணைந்து, நகரசபை தலைவர் தலைமையில் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில், நகரசபை தவிசாளர், உப நகர பிதா, நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், பிரதம கணக்காளர் ஆகியோர் முன்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது காணிக்கான ஆவணங்கள் எவையும் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவில்லை.

மேலும் காணிக்கான ஆவணங்கள் பிரதேச செயலகத்தில்உள்ளதாகவும் அதனைப் பெற்றுத்தருவதாகவும் பௌத்த தேரர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE