வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு – ஆளுநர் நடவடிக்கை

672

வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்ய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறை அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த அவர், உடனடித் தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் சந்திப்பினை நடாத்தி வந்தார். மாகாண சபையின் ஆட்சி கடந்த ஒக்டோபர் இறுதியில் முடிவுக்கு வந்த பின்னர் அச் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பினை இன்று புதன்கிழமை தொடக்கம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடாத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பிரச்னைகளுடன் வரும் மக்களை பேச வைத்து அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று புதன்கிழமையும் ஏராளமான மக்கள் ஆளுநரை சந்தித்து தமது பிரச்சினைகளைத் தெரிவித்தனர்.

இதனால் பிரச்சினைகளுடன் வரும் மக்களில் பெரும்பாலானோர் தமது பிரச்சினைக்கான தீர்வினை அல்லது தீர்வுக்கான இலகு வழிகளை காணக்குடியதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE