இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? 

137

 


இலங்கையில் 2020ம் ஆண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பரப்புரைகளை பிரதான கட்சிகள் இப்போதே மேற்கொள்ள ஆரம்பித்து விட்டன. மூன்று தரப்பினர் தங்கள் வேட்பாளர் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

தற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிபால சிறிசேன 2020 இற்குப் பின்னரும் ஜனாதிபதியாக வரும் விருப்பத்தைக் கொண்டுள்ளார். அதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 2020ஆம் ஆண்டில் ஓய்வு பெறப்போவதில்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அவரது ஆதரவாளர்கள் பலரும் அவரே மீண்டும் ஜனாதியாகத் தொடர்வார் என்று கூறுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார், இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவினாலேயே ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இணைந்து நாட்டில் ஒரு கூட்டரசாங்கம் நடைபெற்று வருகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுடன் இந்த கூட்டரசாங்கம் முடிவிற்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ரணில் ஆதரவாளர்கள் இதனைத் தெரிவித்து வருகின்றனர்.

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே பயணத்தை ஆரம்பிக்கும் எனவும், அதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை என்றும் அக் கட்சியைச் சார்ந்த அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர் அவரைக் களமிறக்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலுக்கு எதிரானவர்கள் சிலர் இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி அக்கட்சியின் வேறு உறுப்பினர்களிடம் இல்லை என்றே கூறவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவிலான கூட்டு எதிர்க் கட்சியினர் தங்களது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவே என்று கூறி வருகின்றனர். கோட்டாபய ராஜபக்ஸவும் அதற்கு தயாராக இருப்பதாகவே அறிவித்து வருகின்றார். அத்துடன் அதற்கான ஆயத்த வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை ஏற்படும் என்பதால் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

எனினும், மஹிந்த ராஜபக்ஸவே தங்கள் தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும். தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஸதான் வேட்பாளர் என்பதை இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பதாக அவர் கூறி வருகின்றார். பல சந்திப்புக்களில் கோட்டாபய ராஜபக்ஸதான் ஜனாதிபதி வேட்பாளரா? என ஊடகவியலாளர்கள் கேள்விகளை தொடுக்கின்ற போது அதற்கு மழுப்பலான பதிலையே மஹிந்த கூறிவருகின்றார். என்றாலும் கூட, கோட்டாபயவைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக அவரும் மனதில் கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஸ கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை என்றும், தனது அடுத்த வாரிசாக அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஸவையே அவர் கருதுவதாகவும் சிலர் கூறுகின்றனர். அதில் உண்மை இருந்தாலும் கூட, நாமலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மஹிந்த இப்போதைக்கு விரும்ப மாட்டார். அந்த வகையில் கோட்டாபயவே மஹிந்தவின் கூட்டு எதிரணியினால் முன்னிறுத்தப்படுவார் என்றே நம்பலாம்.

இந்த மூன்று தரப்பு வேட்பாளர்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை அவதானிக்கையில், மைத்திரிபால சிறிசேனவிற்கு சிக்கல் நிலை தோன்றுவதாகவே கணிப்பிட முடிகின்றது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கினால் மட்டுமே சில சமயம் அவருக்கு வெற்றி கிட்டலாம்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையிலும், ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்படும் நிலையிலும் அவருக்கான வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியானதாகவே அமைகின்றது. அதுமட்டுமல்ல, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதனாலும் அவருக்கு மேலும் சிக்கல் நிலையே ஏற்படும்.

இறுதிக் கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சமரசம் ஏற்பட்டு 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் போன்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் ஏதும் உள்ளதா என்று பார்த்தால், அது சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 2015ம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்கியது தவறு என்று அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ரணிலின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அவரது நிர்வாகத் திறமை குறித்தும் மக்களுக்கு திருப்தி இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் அதிகமானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மக்களின் ஆதரவு எந்தளவில் இருக்கும் என்பதை இப்போது எதிர்வுகூற இயலாது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த அணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் மீண்டும் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் ஒன்று நாட்டில் ஏற்படலாம் என்கின்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம் என்றே கூறலாம். ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ நிறுத்தப்படுவதை பொதுமக்கள் அவ்வளவாக விரும்பவில்லை. மஹிந்த ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவரை ஒரு ஜனநாயகவாதியாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர் படைத் தரப்பைச் சேர்ந்த ஒருவராகவே மக்களால் பார்க்கப்படுகின்றார்.

வாழ்வாதாரம் சீரற்ற நிலையிலிருந்தாலும், தற்போதுள்ள ஜனநாயக சூழல் மோசமடைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு நாட்டின் தலைவரை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு என்று முழு நாடும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக கோட்டாபயவை பார்க்க முடியாதுள்ளது. பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறும் சக்தி அவருக்கு இருக்கிறது. படைத்தரப்பினரது ஆதரவும் அவருக்கு உள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்களின் வாக்குகளும்; அமைந்துள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

நாட்டிலுள்ள மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரே ஜனாதிபாக முடியும். அந்த வகையில் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த அணியினால் களமிறக்கப்பட்டால் அவர் வெற்றிபெறுவரா? என்பதை எதிர்வுகூறுவதும் கடினமானதாகவே உள்ளது.

இங்கு மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற இராணுவ சதி முயற்சியொன்று நடைபெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஸவை மனதில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறான நிலைமை ஏற்படாது என்று மறுப்பதற்கில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 19 மாதங்கள் உள்ளன. பிரதான மூன்று அணிகளும் தற்போதே பரப்புரைப் போரை ஆரம்பித்து விட்டன. பலத்த போட்டி நிலவப் போகின்ற நிலையில் மக்கள் மத்தியில் குழப்பமான மனநிலை இப்போதே ஏற்பட ஆரம்பித்து விட்டது.

SHARE