மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரி இறக்குமதி செய்யும் உரிமை யை கசினோ சூதாட்டக்காரருக்கு வழங்கி அதன் மூலம் பெற்றுக்கொண்ட லஞ்சப் பணத்தில் தான் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மகன்மார் செய்மதிகளை விண்ணு க்கு அனுப்பி வைத்தனர் எனக் குற்றம் சாட்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை ராஜபக்ஷ குடும்பமே அழித்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம் பெற்ற ரொஷான் குணரத்ன நேற்று செவ்வாய்க்கிழமை கொலன்னாவையில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்றதும் மக்கள் மனதில் அது ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனமென்ற நினைப்பே மேலெழுகின்றது.
வாகனங்களிலிருந்து எரிபொருட்களை திருடுவது, வாகனங்களை சொந்தத் தேவைகளுக்காக பயன்படுத்துவது, எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கும்போது லஞ்சம் வாங்குவது போன்ற செயல்கள் தொடர்பிலேயே மக்கள் மத்தி யில் பேசப்படும். ஆனால் இதற்கு மேலான பயங்கரமான மறுபக்கம் இக் கூட்டுத்தாபனத்தில் உள்ளது. இது மக்களுக்கு தெரியாது. எரிபொருட்கள், நிலக்கரி, கேஸ் கொள்வனவு செய்யும் போது பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன.
2011 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் ஐந்து தடவைகள் எரிபொருட்களை எமக்கு வழங்கவில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள். செலவை அதிகரித்தனர். பலகோடி ரூபாய்களை கொள்ளையடித்தனர்.
இதுதொடர்பாக பல தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டோம். ஆனால் இதனை தடுக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எரிவாயு மூலம் ஒவ்வொரு தொன்னுக்கும் 15 டொலர் மேலதிகமாக பெற்றுக் கொள்ளப்பட்டது.
நிலக்கரி கொள்வனவுக்கான கேள்வி கோரல்கள் ஒரு போதும் மேற்கொள்ளப்படவில்லை.இதனை கொள்வனவு செய்வதற்கான உரிமை கசினோ சூதாட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனூடாக பெற்றுக் கொண்ட பணம் மூலமே ஜனாதிபதி மஹிந்தவின் பிள்ளைகள் விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பினார்கள்.இனிமேல் இவ்வாறான ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டோம். தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டமடையும் நிறுவனமல்ல. ஆனால் அதனை பணம் வீணாகும் நிறு வனமாக காண்பித்தனர்.ஆனால் உண்மை அதுவல்ல. ராஜபக் ஷ வின் ஆட்சியின் செலவுக்காக பணத்தை பெற்றுக் கொள்வதற்கே இந்நிறுவனம் சின்னாபின்னமாக்கப்பட்டது என்றார். இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.