9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது.

394

 

9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியன இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.

இந்த மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாசாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர்.

1964 ஆம் ஆண்டு புதுடில்லி மாநகரில் நடைபெற்ற 26 ஆவது அனைத்துலக தென்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைசார் கல்விமான்களின் சிந்தனையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றன. மூன்றாவது மாநாடு பிரான்ஸின் பாரிஸிலும் 1970 ஆம் ஆண்டும், நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும், 5 ஆவது மாநாடு 1981 ஆம் ஆண்டு மதுரையிலும், 6ஆவது மாநாடு 1987 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலும், 7ஆவது மாநாடு 1989 ஆம் ஆண்டு மொரீசியஸிலும், 8 ஆவது மாநாடு 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE