வவுனியாவில் அடகு கடையிலிருந்து திருடப்பட்ட பெருந்தொகை பணம் மற்றும் நகை மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களிற்கு முன் நகை அடகு கடையிலிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டடிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த அடகு கடையிலிருந்து கொள்ளையிடப்பட்ட ஆறு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான நகையும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை இன்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை சந்தேக நபரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.