இலங்கை பிரஜைகள் சிலர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பில் இணைந்து கொண்டு, பின்னர் நாடு திரும்பியிருக்கின்றார்கள் என்று அரசாங்கம் அறிந்திருந்த போதிலும், வெளிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது உள்நாட்டு சட்டங்களுக்கு முரணானதாகக் காணப்படாமையால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையைச் சேர்ந்த சிலர் சிரியாவிற்கு சென்றதை நாங்கள் அறிந்திருந்தோம். எனினும் எமது நாட்டுச் சட்டங்களின்படி அவ்வாறு வெளிநாடொன்றுக்குச் செல்வதோ, மீண்டும் நாடு திரும்புவதோ அல்லது வெளிநாட்டு கடும்போக்கு அமைப்பொன்றில் செயற்படுவதோ குற்றமாகக் கருதப்படவில்லை.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் இணைந்து கொள்பவர்களை கைதுசெய்வதற்கு ஏதுவான சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டில் இல்லை. மாறாக இலங்கைக்குள் செயற்படுகின்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சட்டங்களே இங்கு காணப்படுகின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கின்றது.
இச்சட்டத்தின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு முரணனான, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பிடியாணை இன்றி கைது செய்வதற்கும், அவர்களை எந்தவொரு உத்தியோகபூர்வ நிலையங்களிலும் முன்னிறுத்தாமல் 18 மாதங்கள் வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட போது சர்வதேச நாடுகள் பல தமக்கு அவசியமான உள்ளக சட்டங்களைப் பலப்படுத்திக்கொண்டன.
2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டதுடன், அதன் ஊடாக தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடுதல், வெளிநாடொன்றில் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் உள்நுழைதல், வெளிநாட்டு தீவிரவாத அமைப்புடன் தொடர்பேற்படுத்தல் உள்ளிட்டவை குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.
அதே ஆண்டில் அயர்லாந்து புதிய குற்றவியல் சட்டமொன்றை நிறைவேற்றியது. அதன்மூலம் தீவிரவாத செயற்பாடுகளுக்குப் பயிற்சி பெறுதல் உள்ளிட்ட அவசியமான காரணிகள் உள்ளீர்க்கப்பட்டு, தற்போது சட்டமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.