ஒற்றுமையாகக் கூடி, ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப்பாட்டுடன் கூடிய ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
“நாகரிகமான ஓர் அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே இன்று நாம் 67 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்.
இலங்கையின் முதலாவது பிரதமர் தேசபிதா டீ.எஸ்.சேனாநாயக்க, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே சுதந்திரப் போராட்டத்திற்கு பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்தச் சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த ஒற்றுமையைப் பாதுகாத்த வண்ணம், அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிப்பதே தேசத்தின் சவாலாக இருந்தது.
ஆனாலும், துரதிஷ்டவசமாக அந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு எம்மால் முடியவில்லை. தற்போது, அவ்வாறான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமொன்று மீண்டும் எமக்குக் கிடைத்துள்ளது.
பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மதங்களைப் பின்பற்றும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் தேசத்தின் நலனின் ஒரு பொது நோக்கத்திற்காக சகல பேதங்களையும் மறந்து ஒரு மேடையில் ஒன்றிணைந்துள்ளன.
ஒற்றுமையாகக் கூடி, ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் ‘லிச்சவி’ எனும் அரச நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப்பாட்டுடன்கூடிய ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும்.
நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உண்மையான அர்த்தம் பொருந்தியதாக ஆக்குவதன் பொருட்டு அந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இன்றைய தினம் உறுதிபூணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.