தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேபோன்று எந்த அரசியல்வாதியும் எந்த பிரஜையும் தன்னுடைய சுயநலத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கக்கூடாது.
இது ஜனநாயக ரீதியிலும் தவறான நடவடிக்கை என்பதுடன் மனிதாபிமான செயலும் அல்ல. இஸ்லாத்தின் பார்வையிலும் முறையானதல்ல. இவற்றை முற்றாக அனைவரும் தவிர்த்துகொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அத்துடன் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு மரணித்தவர்களின் உடல்களை நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம். இஸ்லாத்துக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. கிறிஸ்தவ மக்கள் ஞாயிற்றுக்கிழமையில் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபவதற்கு அச்சமாக இருந்தால் அல்லது பாதுகாப்பு பிரிவு வழிபாட்டுக்கு செல்லவேண்டாம் என்று தெரிவித்தால் முஸ்லிம் சமூகம் என்றவகையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் இடம்பெற்றுள்ள அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் நாட்டின் பாதுகாப்பு பிரிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் முகத்தை மூடி ஆடை அணியும் எமது பெண்களிடம் ஒருகோரிக்கையை நாங்கள் விடுத்திருக்கின்றோம். அதாவது இந்த காலப்பகுதியில் நீங்கள் பொது இடங்களுக்கு செல்வதாக இருந்தால் முகத்தை மூடிச்செல்லவேண்டாம் என்ற பணிவான வேண்டுகோளை விடுத்திருக்கின்றோம்.
மேலும், ஆடை ஒரு கலாசாரம். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை. நாங்கள் மதத்தலைவர்கள் என்றவகையில் நாங்கள் சொல்லி அவர்கள் புர்கா அணியவில்லை. அப்படி அணிவதாக இருந்தால் அனைத்து முஸ்லிம் பெண்களும் அணியவேண்டும். கறுப்பு நிறத்தில் அணிவதும் நாங்கள் சொல்லி அல்ல. அவர்கள் விரும்பியதன் பிரகாரம் விரும்பிய நிறத்தில் அணிகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.