இலங்கை தற்கொலை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வெளிநாட்டில் நிதி திரட்டும் கனடா மாணவி

211

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வாழும் மாணவி இணையத்தில் நிதி திரட்டி வருகிறார்.

இலங்கையில் ஏப்ரல் 21-ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதில் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் சிறுமி ஒருவர் நிதி திரட்டி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி ரஜனிகாந்த் என்பவர், 2008-ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றவராவார். 17 வயதான இவர் ஆல்பெர்ட்டாவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கோஃபண்ட்மீ (gofundme) என்னும் இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

இதுகுறித்து, அவர்  கருத்து தெரிவிக்கையில் ’’இலங்கை என்னுடைய தாய்நாடு என்பதால் மட்டும் நான் நிதி உதவி செய்ய நினைக்கவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் உலகளாவிய அளவில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தனை உயிர்களை இழந்த பின்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை.

30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் படுகொலையின் சோகமும் இன்னும் இருக்கிறது. ஆனாலும் யாரும் உதவவில்லை. இந்நிலையில் இப்போது நடந்த தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன்மூலம் இலங்கையைக் காப்பாற்றுங்கள்.

இங்கு திரட்டப்படும் தொகை அனைத்தும் ஆசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், இவர் 1000 டொலர்கள் என்ற இலக்குடன் நிதி திரட்டலை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

SHARE