மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் இராணுவத்தினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
வாகன சராதி உட்பட15 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் இராணுவத்தினர் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி 15 வீரர்களை மரணமடைய செய்துள்ளனர்.
இதற்கு முன்பு நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள் எரித்துள்ளனர். இன்று காலை சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25 வாகனங்களையும் மாவோயிஸ்டுகள் அடித்து நொருக்கி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை கொண்டாட அம்மாநிலம் முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் மாவோஸ்டுகளின் இச் செயல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.