அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டிந்தது.
வைபவ் கப்பல் திருகோணமலையில், தரித்து நின்ற போது, இந்திய கடலோரக் காவல்படையினர், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். இதன்போது, கடற்புலிகளிடம் இருந்து சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்களைப் பார்வையிட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர். ஆச்சரியமடைந்தனர்.
கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்கள் தொடர்பாக சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர், இந்தியக் கடலோரக் காவல்படையினருக்கு விளக்கிக் கூறியிருந்தார். இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான வைபவ் கடந்த 2ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.