அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்செலா மெர்கெல், ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்றிரவு ஒபாமாவை சந்தித்து பேசிய அவர், உக்ரைன் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பான விடயத்தில் தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் மெர்கெல் பேசுகையில், பிராந்திய ஒருமைப்பாடுகளை பின்பற்றாவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் அமைதியை காண முடியாது என்றும், ஆயுதங்களின் வலிமையை காட்டி ஐரோப்பாவின் அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டில் உள்நாட்டு தாக்குதல்களில் 5,400 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மெர்கெல், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உக்ரைன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பின்னர் இதுபற்றி ஒபாமா கூறுகையில், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் ரஷ்யா தனது ராணுவ பலத்தை காட்ட முயற்சி செய்து வருவதை கண்டித்ததோடு, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், ஆனால் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். |