பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் பழந்தமிழர்கள். ‘முக்கனியே…‘ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் இருக்கிறோம். ஆனால் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித் தருபவை கனிகள். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.
கோடையின் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி, கிர்ணி என அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

பழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் என்ற கவலை இல்லை.
பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் சி உள்ள காய்கறி பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும். சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின்-சி சத்துக்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. பழங்களை தினமும் சேர்த்துக்கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.