
கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம் போன்றவை சுவையற்றதாக தோன்றும். அதுவரை சுவைத்த விருப்ப உணவுகளும், பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். ஏதாவது வாசனை வந்தால் கூட, வாந்தி ஏற்படும்.
அதற்காக எதையும் சாப்பிடாமல் தவிர்க்க கூடாது. அடிக்கடி பழச்சாறுகளை குடிக்க வேண்டும். எந்த வகை உணவுகளை சாப்பிட பிடிக்கிறதோ, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், புளிப்பு சுவையுடைய உணவை சாப்பிடுவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. அது ஒருவருக்கு மற்றொருவர் வேறுபாடும்.
மருத்துவர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். என்ன செய்தாலும், ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே வந்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவு, இரத்தப்போக்கு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சாதாரண மயக்கம் மற்றும் வாந்தி தான் மசக்கை எனப்படுகிறது. அடிக்கடி தலைசுற்றல், எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் போன்றவை ஏற்பட்டால், அலட்சியம் செய்யக் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இது போல ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறைய பேர் உள்ளனர்.
கருவில் குழந்தையின் முடி அதிகமாக இருந்தால் வாந்தி ஏற்படும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக சொல்லப் பட்டதே. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானது தான் என்றாலும், அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்.