உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது.
உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம்.
அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி. அதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறியதொரு வகிபாகம் உண்டு. செஞ்சோலை வளர்ச்சிக்காக தலைவர் திட்டங்களை முன்வைத்தபோது அவற்றிற்கு உதவியவர்கள் அவர்கள்.
ஆனால், அந்தப் புனிதப் பயணத்தை வழிமறித்து அடக்கி ஒடுக்கியவர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பதற்காக இன்று மீண்டும் ‘செஞ்சோலை’ என்ற பொய் முகத்தோடு உலவ ஆரம்பித்துள்ளார்கள்.
கோதபாயவின் இயந்திர மனிதனான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இதனை ஆரம்பித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள ஊடகங்களின்மூலம் தற்போது சிறிலங்கா அரசின் தூதுவராலயங்களூடாக மீண்டும் ‘செஞ்சோலை’ என்ற விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வங்கிக் கணக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கு பணம் அனுப்புமாறு புலம்பெயர் தமிழர்கள் கேட்கப்படுகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் இவ்வாறன போலி விளம்பரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் ஒருசில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
கோதபாயவின் சிந்தனையில் உதித்த அவரின் இயந்திர மனிதன் கே.பி.யினால் கையாளப்படும் இந்தப் போலி விளம்பரங்களை நம்பி புலம்பெயர் தமிழர்கள், குறிப்பிடப்படும் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்பதே விடயம் அறிந்தோரின் வேண்டுகோளாகும். அவ்வாறு பணம் அனுப்பினால், அது நேரடியாக கோதபாயவின் கரங்களையே சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கே.பி.யை பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெறுபதற்கு என்னென்ன வழிகளுண்டோ, அவை அனைத்தையும் பயன்படுத்த கோதபாய திட்டமிட்டுள்ளார். ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, மருத்துவ உதவி போன்றவற்றிற்கும் கே.பி. மூலமாக புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி சேகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
கோதபாய எந்த ரூபத்தில் வந்தாலும், புலம்பெயர் தமிழர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கே.பி. இதுதொடர்பாக வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தட்டுத்தடுமாறிய காரணம் அவருக்கே தெரியும்.
செஞ்சோலை திட்டத்தை அமுல்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டது என்பதும், அதற்கு அரசின் அனுமதி உண்டென்றும் அவர் தெரிவித்த கருத்துகளில் தடுமாற்றம் தெரிந்தது. இருபது பிள்ளைகளை இனிமேல்தான் ஒன்றுசேர்த்து செஞ்சோலை அமைப்பை செயற்படுத்த வேண்டும் என அவர் குறைப்படுவதிலும் யதார்த்தம் காணப்படவில்லை.
தமிழர்களினால் கட்டி வளர்க்கப்பட்ட மிகப் பெரிய புனிதமான இலட்சியத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கோதபாய செஞ்சோலையை ஆரம்பித்துள்ளார். ஆனால், தமிழ் மக்களிடமுள்ள மிகப் பெரிய கேள்விக்கு கோதபாய இன்னமும் பதில் சொல்லவில்லை.
செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை சிறார்கள் எங்கே? அவர்களை என்ன செய்தீர்கள்? முள்ளிவாய்காலின் இறுதி நாட்களில் அவர்களும் இராணுவத்திடம் சரணடைந்தார்களே! அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
வெளிவந்துள்ள ஒருசில தகவல்களில் மிகச் சொற்பமான தகவல்களே வெளிவந்துள்ளன. கொழும்பு, இரத்மலானை இராணுவ முகாமில் சிலர் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் போராளிகள் என கோதபாய தெரிவித்துளார்.
அவர்களில் சிலர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தனிமைக் கல்வி வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்களுக்கு சிங்களமும் பௌத்தமும் இராணுவமுகாமில் கற்பிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான சிறார்கள் வேலைக்காரர்களாக இராணுவ அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்கின்றார்கள்.
சிறிதரனுக்குப் பாதுகாப்புத் தேவை!
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளைக் கோரியுள்ளன. கூட்டமைப்பின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்டதைப் போன்று அவரும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தாயக மக்களைப் போன்றே புலம்பெயர் தமிழ் மக்களும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.
சிறிதரனின் கிளிநொச்சி பணியகத்துக்காக வழங்கப்பட்ட காவற்றுறைப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர் கைதாகிக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அவர் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது எவருக்கும் தெரியாது. அதனையடுத்து சிறிதரனின் கிளிநொச்சிப் பணிமனை திடீர் சோதனைக்குள்ளானது. அங்கிருந்து வெடிபொருட்கள், ஆபாசப் படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவரின் செயலாளரும் பணிமனைக்குப் பொறுப்பாளராகவும் இருந்தவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில், வேண்டுமென்றே தம் பணிமனை மீதும் தம் ஆதரவாளர்கள் மீதும் திட்டமிட்டு எதிர்நடவடிக்கைகள் அரசினால் எடுக்கப்பட்டு வருவதாக சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கிளிநொச்சியில் இவை இடம்பெற்றுள்ளன.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையடுத்து, அவரின் கிளிநொச்சிப் பணியகத்தின் காவற்றுறையினர் அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்பு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவரின் உரைக்கு முற்றிலும் மாறுபாடான விபரங்களைத் தெரிவித்தார்.
அதன் பின்பே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அல்லது சம்பந்தனோ அல்லது வேறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ எந்த ஒரு குரலும் எழுப்பாமல் மௌனம் காப்பதின் மர்மம் என்னவென்று புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பல கேள்வி எழுப்பியுள்ளன.
கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அரசுக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்குமேயானால், அவருக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் குறைக்கப்படலாம் என்பதும் ஏற்புடைய கருத்தாக அமைகின்றது. கூட்டமைப்பு வெளிநாட்டுக் கிளைகள் கூட அதன் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விபரமாக எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றன.
புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இதுதொடர்பாக விபரங்கள் இடம்பெறுகின்றன. பலர் இவற்றில் பங்குபற்றி தமிழர் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்தமான கொள்கை என்ன என்று கேட்குமளவுக்கு இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. சக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையிட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி இருப்பதைப் போன்ற தோற்றப்பாடே காணப்படுகின்றது. ஏன்?
அவருடன் சேர்ந்து நின்றால் அவரைப் போல் எங்களையும் புலிகள் என்று அழைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்களா? இலங்கை அரசு யாரைப் புலிகள் என்று அழைக்கவில்லை என்று குறிப்பிட முடியுமா? அரசைப் பொறுத்தவரை பராக் ஒபாமா, நவநீதம் பிள்ளை உட்பட தமிழர்களுக்கு உரிமை கோரும் சகலரும் புலிகள் என்றுதானே இலங்கை அரசு குறிப்பிடுகின்றது.
பிரதம நீதியரசர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தபோது, அவரும் புலி ஆதரவாளர் என்றல்லவா அரசு குறிப்பிட்டிருந்தது? புலம்பெயர் தமிழர்கள் பலர் ஊடகங்களில் இவைபோன்ற பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என பெரும்பாலான புல்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதனால், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இதுதொடர்பாக வெளிநாடுகளின் உதவியை, குறிப்பாக தாம் வாழும் நாடுகளின் ஆதரவை நாடியுள்ளன. கிளிநொச்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஈ.பி.டி.பி.யினரும் நடத்திய சிறிதரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அவருக்குப் பாதுகாப்பு அவசியம் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது.
இதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. இரா. சம்பந்தனைப் பற்றி மற்றொரு தகவல் லண்டனில் வெளியாகியுள்ளது. சம்பந்தனை கடந்த ஜூலை மாதம் கொழும்பில் சந்தித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பாலிக்ஸ் இதனை வெளியிட்டுள்ளார்.
அவர் தம்மிடம் இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்தோ, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தோ, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ பேசவில்லை. வன்னிப் பகுதி மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் சில வழங்கப்பட வேண்டும் என்பதை மாத்திரமே அவர் என்னிடம் தெரிவித்தார் என பிரித்தானிய நாடாளுமன்ற வளவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழர் தொடர்பான கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான காணொலிப் பதிவு சகல புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி தற்போது ஒளிபரப்பும் செய்யப்பட்டும் வருகின்றன. சம்பந்தன் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வெளிவராததினால் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய விடயம் புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம் என்றே ஊடகங்க விமர்சனங்கள் பல சுட்டிக்காட்டுகின்றன.
திரு. சம்பந்தன் 35 ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர். அந்த அனுபவ மூப்பின் அடிப்படையிலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தெரிவானார்.
முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் தமிழரின் விடுதலைக்காக இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்பு செய்யப்பட்டது வரை அவர் மிகத் தெளிவாக கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் அறிந்திருக்க வேண்டும். அந்த போராட்டத்தின் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை அரசும் வெளிநாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது ஒருசில யதார்த்தங்களைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே ஆய்வாளர்கள் கருருகின்றார்கள். இலங்கை அரசு தமிழருக்கான தீர்வை வழங்கத் தயாராக இல்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதுமே தாமாகவே தீர்வொன்றை வழங்க முன்வராது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எப்படியும் தீர்வொன்றைப் பெற்றுக்கொள முடியும் என சம்பந்தன் சிலவேளை நம்பியிருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பலம்வாய்ந்த தமிழர் பாதுகாப்பு அரண் இருந்தபோதே பிரச்சினைக்குத் தீர்வுகாணாத இலங்கை அரசு பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தீர்வொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் என்று தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது என பல அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திரும்பியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி அவலங்களுக்கு இலக்கான தமிழர்களுக்கு உதவும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஈடுபடலாம். அதைத் தவிர உள்நாட்டில் எவ்வித முயற்சியும் பயனளிக்காது என்பதும் கூட்டமைப்பு புரிந்துகொண்டிருக்கும் என்பதே புலம்பெயர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், திரு. சம்பந்தன் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் கருத்துகளினால் வெளிநாடுகளினால் முன்னெடுக்கப்படும் இலங்கை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துவரும் இன்றைய நிலையில், அவர் தனது நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அவர் விபரிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் கொள்கைகள் தீர்க்கமாக எடுக்கப்பட்டு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இராணுவத்தினர் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது உலகறிந்த உண்மை. ஆனாலும், அதனையும் தாண்டி ஜனநாயக வழியில் கூட்டமைப்பினால் நடந்து செல்ல முடியும். வட மாகாணத்தில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள், சிறுமிகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஆனால், ஒரேயொரு சிங்கள இளைஞர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார். அதுகுறித்து தகவல் தருபவருக்கு பத்து இலட்சம் ரூபா பரிசு. கொழும்பிலிருந்து வந்த விசேட குழு விசாரணை. தமிழரின் இன்றைய நிலை இதுவே என்பது யதார்த்தம்.