தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு கனேடிய தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாசைகளை மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டும். இந்த தமிழ் தலைவர்களின் ஆலோசனைக்கு அமையவே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர். இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே சம்பந்தனும், சுமந்திரனும் செயற்பட்டு வருகின்றனர். ஜனநயாக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமைகள் சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கு தேவையான அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவை கனேடிய தமிழர் பேரவை வழங்கும். என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது