நீங்கள் கொண்டு வந்தியள் பாருங்கோ ஒரு தீர்மானம். தென் இலங்கை திடுக்கிட்டு போச்சு mar 24, 2015 மாப்பு எங்களுக்கு ஐநாவில வைக்க போறார் உவர் ஆப்பு எண்டு ஆடிப்போயிட்டுது . எங்கட சனமும் முந்தி புலியள் பின்வாங்கி வரேக்க அவங்கள் ஆமிய உள்ளுக்க வரவிட்டு அடிக்க போறான்கள் எண்டு நம்பினமாதிரி நீங்கள் செய்தத பார்த்து என்ன இருந்தாலும் படிச்சவர் படிச்சவர் தான் எண்டு பெருமைப்பட நீங்களோ அடிச்சு பிடிச்சு ஓடிப்போய் மை டியர் மைத்திரி அது நான் மகிந்த அன் கோ வுக்கு எதிராக தான் கொண்டுவந்தனான் எண்டு தமிழற்ற பாலுக்கும் காவல் சிங்கள பூனைக்கும் தோழன் எண்டு காட்டிப்போட்டியள். யூ ஆர் எ வெரி குட் அக்டர் சேர் .
ஆராம்பத்தில இருந்தே இணக்க அரசியல் தான் என்வழி அது தான் என்ர தனி வழி எண்டு சொல்லுற டக்ளசிட்டையே உத நீங்கள் குடுத்திருக்கலாம் எண்டு சனம் சொல்லுது . ஏனெண்ட அதுக்க கன எலிகள் இல்ல. அது தேனீ கூடு. ராணி தேனீய சுற்றி ஒரே நோக்கம் ஒரே செயல் தான். குறுக்க மறுக்க இழுக்காதுகள். எடுத்த காரியத்தை முடிக்கத்தான் பாப்பாங்கள். ஆடிற மாட்டில ஆடி ஆடி பால் கறந்து போடுவாங்கள். ஆனா உங்கட பாடு அப்பிடியில்ல. கன எலிகள் சேர்ந்தா புத்துக்கு மண் எடுக்காது எண்டு என்ர பெத்தாச்சி சொல்லுறவ. அப்ப எனக்கு விளங்கேல்ல. இப்ப உங்கட சபையை பாக்கேக்க நல்லா விளங்குது .
உங்கட எதிர்க்கட்சி தலைவரும் உங்களை நல்லா போட்டு குடையிறார். கண்டபடி கணக்கு வழக்கு கேக்கிறார். ஒரே நாளில 131 வேலை திட்டங்கள் செய்தனியளோ ? எண்டு கேக்க நீங்களும் மழுப்பலாய் 2014 முடியேல்ல அந்த 69 கோடி பணம் 2015 க்கு செலவிட வைப்பில இருக்கு எண்டு பச்ச பிள்ளை மாதிரி பதில் சொல்லுறியள் . அடுத்த தடைவையும் அவர்கேட்டா நீங்கள் ரஜனி ஸ்டயிலில நான் ஓன்றுக்கு செலவிட்டா நூறுக்கு செலவிட்ட மாதிரி எண்டு சொல்லுங்கோ அதுக்கும் அவர் அடங்காட்டி வடிவேலு மாதிரி, வாணாம் விட்டிடு அழுதிடுவன்,வலிக்குது எண்டு சொல்லுங்கோ. உங்களுக்கு வலிச்சா அவர் விட்டிடுவார். ஏனெண்ட அவரும் பை பாஸ் ஒப் பரேசன் செய்தவர். வயசானவரை கொண்ட பழி வரும் எண்டு பயப்பிட்டு விட்டிடுவார் .
இப்ப இணக்க அரசியல் செய்யப்போறதாய் நீங்கள் சொல்ல எல்லாம் தந்தாத்தான் இணக்கம் எண்டு சுரேஸ் சொல்லுறார். அவருக்கு ஏற்கனவே உங்களோட கறள் இருக்கு. அவர் வைச்சிருந்த குழு வைப்பற்றி அறிஞ்சிரிப்பியள். தம்பியரை கொண்டு குடைச்சல் தருவர். செங்கோல் சிங்கனும் தாடிய பிடிச்சு இழுப்பார். அடங்காபிடாரி அக்காவும் முறைக்கிறா கவனம். உங்களுக்கு உது நித்திய கண்டம் தான். தமிழ் அரசியல் நீங்கள் படிச்சு ரசிச்ச இராமாயண காண்டங்கள் மாதிரியில்ல. உவங்கள் உங்களை மல்லாக்க போட்டு ஒரு முட்டை கூட போடா விடமாட்டாங்கள்.