
இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் சாகேப் பால்கே. ஆகையால் தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இந்திய சினிமா துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியதால் அவரது பெயரிலேயே ‘தாதா சாகேப் பால்கே’ என்ற விருது வழங்குகிறது. இந்த விருதுதான் இந்திய சினிமா துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.
1969-ம் ஆண்டு முதல் சினிமா துறையில் அறிமுகமாகி 190-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட செய்தியில் பெரும் மதிப்புக்குரிய ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.