இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினை முன்னிட்டு, இன்று காலை (11.03.2015) 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் இந்தியன் வீடமைப்புத்திட்டங்கள் தமக்கு உரிய முறையில் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்களால் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்கள் இந்தியாவிலிருந்து தாம் வருகைதந்து 06 வருடங்கள் கழிந்துவிட்டது என்றும், தொடர்ந்து இப்பிரதேசங்களில் வருடக்கணக்கில் வசித்துவருகின்றபோதும் உரிய முறையில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனவும், இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் அநீதிகள் ஏற்பட்டிருப்பதாகவும், தாம் அதில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வலியுறுத்தினர்.
எனினும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு புதிய அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வீட்டுத்திட்டங்களைத் வழங்குமாறு தெரிவித்து, வவுனியா நகரசபையில் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து, வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். இம்மகஜரை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக தாம் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும், இதற்கான சிறந்த தீர்வுகளை தாம் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், விநோதராதலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன், தியாகராசா, சிவமோகன், பிரதேச செயலாளர்கள், பிரஜைகள் குழுத்தலைவர், பெருந்திரளான பொதுமக்கள் என பலரும்; கலந்துகொண்டு, அரச அதிபரிடம் சென்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னரே, மக்கள் முன் அரச அதிபர் முன்வந்து வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளே சென்று உரையாடினர். இதன்போது உள்ளே செல்வதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
உள்ளே சென்றபோதும் கூட ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு அரச அதிபர் பணித்தார். உள்ளே என்ன நடந்தது என்பது அறியப்படாதநிலையில், அரச அதிபர் வெளியில் வந்து இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினார். இதன் பின்னர் மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறிச் சென்றனர்.
படங்களும் தகவல்களும் இ.தர்சன்