சிறுகதை: கவிதா பைத்தியக்காரியாகின்றாள்

437

(எழுத்தாளர் புயல் ஸ்ரீகந்தநேசன்)

‘…மூட நம்பிக்கையில் மூழ்கி யிருந்த அந்த ஊர் மக்கள் எவரும் வெளி யில் வந்து பார்க்கவில்லை. நாய்களுக்கு சந்தோஷம். கதவைத் தட்டுகின்றார். பேய் என்று பயந்து கவிதா உலக்கையுடன் வந்து…’

சலசல என சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது பேராறு. அழகான மாம்பழக் குருவிகள் கீ…கீ… என்ற வாறு காட்டுக்கொய்யா மரங்களில் தாவிப்பறக்கின்றன. ஆற்றுநீர் வேகமாக ஓடுவதனால் ஆற்றங்கரையில் வெண் மணல் கும்பி கும்பியாக கிடக்கின்றன. ஆற்றுக்குக் குறுக்காக கிடந்த முதிரைக்கட்டையில் அமர்ந்தவாறு இந்த இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார் கந்தசாமியார். அந்த வெண்மணலில் அமர்ந்திருந்த கந்தசாமியாரின் மனைவி கவிதா பிடித்த மீன்களை பையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதாகக் கூறினார்கள் கந்தசாமியாரின் இரண்டு தங்கைமார்களும். யாழ்ப் பாணத்தில் ஆறு இல்லாததினால் ஆற்று மீன் அங்கு கிடைக்காது என்ற சிந்தனையுடன் இருவரும் நாளைக்கு பொரித்தும் கறி வைத்தும் கொடுப்பதற்காக மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மாங்குளத்துக்கும் ஒலுமடுவுக்கும் இடையில் ஓடுகின்ற ஆறுதான் பேராறு. அந்த இரண்டு கிராமத்திற்கும் அந்த ஆற்றினால், கறி வைப்பதற்கு மீனுக்கு பஞ்சமே ஏற்படுவதில்லை. தைப்பொங்கலை அடுத்து வரும் பட்டிப் பொங்கலுக்கு அந்த ஆற்றில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு வரிசையாக வருவார்கள் அந்த இரண்டு கிராமத்து மக்களும். அன்றைய தினம் அந்த ஆற்றில் மக்களினதும் மாடுகளினதும் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். சில வேளைக ளில் இரண்டு கிராமத்து மாடுகளும் ஒன்றையொன்று மோதிக்கொள்வதும் உண்டு. தோல்வி அடையும் மாட்டின் சொந்தக்காரனுக்கும் வெற்றியடையும் மாட்டின் சொந்தக்காரனுக்கும் மோதல் வந்து கடைசியில் கிராமத்தில் உள்ள பெரியார்கள் சண்டையைத் தீர்த்து வைப்பார்கள். இறுதியாக சண்டைப் போட்ட இருவரும் இணைந்தே கள்ளுத் தவறணைக்குச் செல்வார்கள். இது அந்த இரண்டு கிராமத்தினதும் வழமையாகிறது.

இப்படியான பட்டிப் பொங்கலன்று கந்தசாமியார் தனது எருது மாடுக ளுடன் பேராறுக்குச் சென்றார். பக்கத்து கிராமத்தில்; இருந்து கவிதா, தனது பசு மாட்டுடனும் அதன் கன்றுடனும் வந்தாள். மாங்குளத்தைச் சேர்ந்த கந்தசாமியாருக்கு முப்பது வயது தான் இருக்கும். இன்னும் திருமணமாகவில்லை. கட்டுடல் தோற்றம். பார்த்த பெண்கள் காதல் கொள்ளாமல் போகமாட்டார்கள். ஒலுமடுக் கிராமத்தைச் சேர்ந்த கவிதாவும் வடிவில் குறைந்தவள் இல்லை. கண்டோர் காதல் கொள்ளத்தக்க இடையும் மார்பகமும் வட்டமான முகமும் உடையவள். கவிதா யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வந்ததினால் ஆற்றுக்குள் இறங்கி அந்தப் பசு மாட்டையும் கன்றையும் குளிக்கவாக்க முடியவில்லை. இதை அவதானித்த கந்தசாமியார் அவளுக்கு உதவி செய்கின்றார். பசு மாட்டின் கயிற்றை வாங்கிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்குகின்றார். இதனால், திகைப்படைந்த கவிதா கன்றுக் குட்டியின் கயிற்றை கைநழுவ விட்டுவிட்டாள். அது ஆற்றுக்குள் ஓடியதைக் கண்டு இவளும் தன்னை மறந்து ஓடி ஆற்றின் நடுப்பகுதியில் கைகளை மேலே நீட்டியவாறு அமிழ்ந்து கொண்டிருந்தாள். இதனைக் கண்ட கந்தசாமியார் அவளை காப்பாற்றி கரையில் ஏற்றினார். அன்று தொடங்கி இருவருக்குமிடையில் காதல் உண்டாகியது. அன்று வீடு திரும்பிய இருவருக்கும் இனம்புரியாத சந்தோஷம்.

ஒலுமடுவில் வசிக்கும் கவிதாவுக்கு தாய் தந்தையர் இல்லை. தனது அம்மம்மாவுடனேயே வாழ்ந்து வந்தாள். அடுத்த நாளே கந்தசாமியார் அவளின் வீட்டுக்கு பெற்றோருடன் பெண் கேட்டுச் சென்றார். இருவரது விருப்பத்துடனும் இனிதே திருமணம் நிறைவேறியது. திருமணம் முடிந்து இரண்டு வருடங்களின் பின்பு கவிதா வின் அம்மம்மாவும் இறந்து போனதுடன் கந்தசாமியாரின் பெற்றோரும் காட்டுக்கு விளாம்பழம் பொறுக்கச் சென்றபோது யானை அடித்து மரணமானார்கள். கந்தசாமியாருக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பிறக்காதது பெரிய குறையாக இருந்தது. போய்த்திரியாத வைரவர், அம்மன், முனியப்பர் ஆலயங்கள் ஒன்றும் மிஞ்சவில்லை. இறுதியாக அவர்கள் தங்களுக்கு இனிமேல் குழந்தை பாக்கியம் இல்லை என்றே கருதினார்கள்.

ஒரு கிலோகிராம் மீனுக்கு மேல் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி பயணமானார்கள். வீதியில் ஏறிய தும் இராணுவத்தின் வாகனம் வந்து கந்தசாமியாரைக் கைது செய்து கொண்டு சென்றது. கவிதா பொடிநடையாக விரக்தியுடன் மாங்குளத்தில் உள்ள வீட்டுக்கு வந்தாள். காட்டுத் தீ போல ஊர் முழுவதும் கந்தசாமியாரை இராணுவம் பிடித்துச் சென்ற கதை பரவியது. பையில் கொண்டுவந்த மீன்கள் சமைப்பாரின்றி குசினியின் மூலையில் கிடந்தது. மீனின் வாசத்தை மோப்பம் பிடித்த பூனை குசி னியைச் சுற்றி வட்டமடித்தது. ஊர் மக்கள் அனைவரும் கவிதாவின் வீட்டில் திரள் திரளாக நின்றார்கள்.

மூன்று வருடங்களின் பின்பு கந்த சாமியாரின் பிணம் இராணுவத்தினரால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இரண்டு கிராமத்து மக்களும் கந்தசாமியார் உயிருடன் இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பிணத்தைக்கண்டதும் பேரிழப்பாக இருந்தது. கந்தசாமியாரின் முகம் கத்தியால் கிழிக்கப்பட்டு பல அடையாளங்களைக் கொண்டிருந்தது. கவிதா பிணத்தைக் கட்டிப்பிடித்து அலறுகின்றாள். ஒன்றும் அறியாத கணவருக்கு ஏன் இப்படி நடந்தது? என்று நினைத்துக்கொண்டு தலைவிரி கோல மாக தலையை சுவறில் சாய்த்துக் கொண்டிருந்தாள். கந்தசாமியாரின் இரண்டு எருது மாடுகளும் வானத்தைப் பார்த்தவாறு படுத்துக்கிடக்கின்றன. கந்தசாமியார் அன்பாக வளர்த்த வேட்டை நாய்கள் அங்குள்ள மக்களிடம் எதையோ சொல்ல நினைக்கின்றன. அவற்றினால் கூறமுடியவில்லை. மக்களுக்கு நாய்களால் எந்த கருத்தினையும் கூறமுடியவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட இரண்டு நாய்களும் வானத்தைப் பார்த்து ஊளை விடத்தொடங்கின. இதனைப் பார்த்த ஊர் மக்கள் நாய்களை அடித்து விரட்டினார்கள். கவலையடைந்த நாய்கள் சோகத்துடன் மாட்டுப்பட்டியில் படுத்துக் கொண்டன. ஊர்ப் பெரியார்கள் மரண சடங்குகளைச் செய்து மாங்குளம் காட்டுச் சுடலையில் கந்தசாமியார் தீயில் ஆகுதியாக்கப்பட்டார். வீடு திரும்பிய அனைவரும் கவிதாவின் வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு அனைவரும் தங்களது வீடுகளுக்குப் பயணமானார்கள். கவிதாவினால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் வெளி விறாந்தையில் அமர்ந்திருக்கிறாள். அந்த நேரத்தில் இரண்டு நாய்களும் அவளுக்கு அருகில் ஓடிவந்ததும் தனது இரண்டு கரங்களாலும் இரண்டு நாய்களையும் தடவுகின்றாள். நாய்கள் மீண்டும் எதையோ கவிதாவி டம் கூற எத்தனிக்கின்றன. அவைகளால் முடியவில்லை. கவிதாவின் முகத்தில் ஏறிப் பாய்கின்றன. சேலையைப்பிடித்து இழுக்கின்றன. கால்களின் கீழ் அடிமையைப் போல கிடக்கின்றன. வாலையாட்டுகின்றன. இப்படியாக இரண்டு நாய்களின் ஆக்கினையும் தாங்க முடியாமல் கவிதா நாய்களை அடித்துக் கலைக்கின்றாள். மீண்டும் அந்த நாய்கள் ஓடிச் சென்று மாட்டுத் தொழுவத்தில் படுத்துக் கொண்டன. இறுதியில் நாய்கள் இரண்டும் இரண்டு எருது மாடுகளுக்கு தாங்கள் கூற நினைத்ததைக் கூறிற்று.

பிடிபட்ட கணவரை எப்படியும் விசாரணை செய்துவிட்டு விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அன்று இரவு ஆகா ரம் எதுவும் உண்ணாமல் படுக்கைக்குச் சென்றால் கவிதா. அன்றிரவு தனது கணவனுடன் பழகிய இனிய நாட்களே அவளின் கண்முன் நின்றன. நித்திரை வரவில்லை. அதிகாலை விடிகின்றது. சூரியன் தனது கதிர்க்கரங்களால் நெற்கதிர்களைக் தழுவுகின்றான். வயது வேறுபாடு இன்றி அனைவரும் வேப்பங்குச்சிகளில் பல்லைத்தீட்டியவாறு அவரவர் வீட்டு முற்றங்களில் அமர்ந்திருக்கின்றனர். பனித்துளிகளின் கனத்தினால் தலைகுனிந்து நின்ற நாணல் புற்கள் மெதுவாக தலையைத் தூக்குகின்றன. கவிதா மெதுவாக எழும்பி கண்களை மூடியவாறு சென்று தனது கணவரின் படத்தில் விழிக்கின்றாள். இரவு புகையிரதத்திற்குப் புறப்பட்ட இரு மருமக்களும் மாங்குளம் புகை யிரத நிலையத்தை வந்தடைந்தார்கள். மாட்டுவண்டியில் வேலாயுதத்தார் அவர்களை ஏற்றிவரச் செல்கின்றார். வேலாயுதத்தாரை இருவருக்கும் முன்பே தெரியும். இதனால், இருவரும் ஓடிவந்து ஏறிக்கொண்டார்கள். வீடு வந்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து ஆசையாக கொண்டுவந்த பொருட்களான வேப்பம்பூ வடகம், பனங்கிழங்கு, வெற்றிலை, நெல்லி, திராட்சைப்பழம் என்று பல பொருட்களை எடுத்து வைத்து விட்டு அண்ணா எப்படியும் வயலில் தான் நிற்பாரென்று அங்கு ஓடினார்கள். அங்கில்லாததைக் கண்டு ஏமாற்றத்துடன் வந்து கவிதாவிடம் கேட்டதும் உண்மையை புரிந்து கொண்டு இடிந்த மண்சுவர் போல அமைதியாகிவிட்டார்கள். அந்த மீன்கள் பை இருந்த இடத்தில் இவர்கள் கொண்டுவந்த பொருட்களும் உண்பாரின்றி கிடந்தன.

அன்று தொடங்கி அவர்களின் வீட்டில் அமைதி நிலவியது. இறுதியாக அந்த மீன்களை நாயும் பூனையுமே உண்டன. இரட்டைப் பிள்ளைகளான சோதியும் ஐPவாவும் யாழ்ப்பாணத்தில் கல்வியற் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அன்றுதான் வீட்டுக்குத் திரும்பினார்கள். கந்தசாமியாரின் உழைப்பிலேயே இருவரையும் படிப்பித்தார். இருவருக்கும் கவலைதான். எங்களுக்கு உழைத்துத்தந்த அண்ணாவிற்கு நாங்கள் உழைத்து கொடுக்க முடியவில்லை என்று. இருந்தும் பிடித்துக் கொண்டு போனவர்கள் விசாரித்துப் போட்டு விடுவார்கள் என்ற துணிவில் இருவரும் வாழ்ந்தார்கள். மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இருவருக்கும் ஆசி ரியர் தொழில் கிடைத்தது. அன்றிலிருந்து இருவரும் உழைத்த பணத்தில் சாப்பாட்டுப் போக மீதிப் பணத்தை அண்ணாவிற்கு கொடுப்பதற்கு சேமித்து வைத்தார்கள். மூன்று வருடங்களாக சேர்த்த பணம் செத்த வீட்டுக்கே பயன்பட்டது.

ஒரு சமயம் இரவு எட்டு மணியிருக்கும். கந்தசாமியாரின் குரலில் கவிதாவைக் கூப்பிட்டுச் சப்தம் கேட்கின்றது. மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்த அந்த மக்கள் எவரும் வெளியில் வந்து பார்க்கவில்லை. நாய்களுக்கு சந்தோஷம். கதவைத் தட்டுகிறார். பேய் என்று பயந்த கவிதா உலக்கையுடன் வந்து கதவைத் திறந்து பார்த்தால் எதிரே கந்தசாமியார் கவிதாவை கட்டிப்பிடிக்க ஓடி வந்தார். பேய் என்ற பயத்தினால் உலக்கையால் ஒரேயடி. மரணமானார். கவிதாவும் மயங்கி விழுந்தாள். நித்திரையில் இருந்த சோதிக்கும் ஐPவாவுக்கும் எதுவும் தெரி யாது. நாய்கள் இரண்டு கந்தசாமியாரை சுற்றிச்சுற்றி ஊளை விடுகின்றன.

சம்பவமறிந்த பொலிசார் ஐPப் வண்டியில் அதிகாலை வருகின்றனர். மயக்கம் தெளிந்த கவிதா ‘ஐயோ எனது மனுசனை நானே அடித்து கொலை செய்து போட்டன்… ஐயோ…’ தலையில் அடித்து அலறுகின்றாள். இரு பிள்ளைகளும் அண்ணாவைக் கட்டியணைத்து அழுகின்றனர். பொலி சார் நடந்த சம்பவத்தினை கூறுகின்றனர். பெயர் பட்டியல் மாறுபட்டதனால் கனக சாமி என்பவரின் பிணம் தவறுத லாக உங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. கனகசாமியின் சொந்தக்காரர் எவரும் இங்கு இல்லை என்ற கருத்தினையும் கூறினார்கள். இதனைக் கேட்ட கவிதா பைத்தியக்காரியாக மாறுகின்றதுடன் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக பொலிசாரி னால் கைது செய்யப்படுகின்றாள். ஐPப்பில் கைது செய்யப்பட்ட கவி தாவை ஏற்றிச் செல்கின்றார்கள். சோதியும் ஐPவாவும் திகைத்துப்போய் நின்றனர். சில வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட கவிதா இன்று பைத்தியக்காரியாக தெருக்களில் சுய அறிவில்லாமல் திரிகின்றாள். இப்போது கவிதாவிற்கு ஆற்றங்கரையே வீடாகிவிட்டது.

SHARE