100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான்!!

1344

இந்த உலகத்தைப் பற்றிய நமது கணக்கீடுகள் தொடர்ந்து தவறுகிறது. இன்னும் நூறாண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சி நம் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் நிலை பெற்றிருக்கும். அந்த உலகத்தோடு நம்மால் ஒத்துப் போக முடியுமா? வளர்ச்சி இருக்கட்டும். வாழ்வாதாரம் என்ன ஆகும்? இன்று கணினி அபரிமிதமான வளர்ச்சியை நமக்கு தந்திருப்பது போல வேலைவாய்ப்புகளையும் அளித்திருக்கிறது. ஆனால், இந்நிலை தொடராது. எதிர்காலத்தை ஆள இருப்பது கணினி மட்டுமல்ல. அதற்கும் மேலே ஒரு ராட்சசன் இருக்கிறது. எதிர்காலத்தில் கணினித்துறையில் வேலைபார்க்கும் மக்களில் 75% மக்கள் தங்கள் வேலையே இழக்க இருக்கிறார்கள்.

 artificial intelligence

ராட்சசன்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligens) என்னும் துறை பற்றி படித்திருக்கிறீர்களா? அதைக் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட கணினி என்று சொல்லலாம். எவ்வளவு தரம் உயர்த்தப்படும் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. இன்று ரோபோக்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டு செயல்படுத்த வைக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை இயங்க வைக்கும். சூழல் சார்ந்த முடிவுகளை மனிதன் எடுப்பது போல் அவையும் நடந்து கொள்ளும். ரோபோக்களுக்கு உள்ளே ஒரே செயலுக்கு பல கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து சரியான, துல்லியமான முடிவை நோக்கிச் செயல்படும். மிகச் சிக்கலான வேலைகளைக் கூட இதன் மூலம் செய்து முடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று மனிதர்கள் பார்க்கும் தகவல்  உள்ளீடு, சரிபார்த்தல், திருத்துதல் ஆகியவற்றை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ரோபோக்கள் செய்துவிடும். இன்று  நூறு மனிதர்கள் செய்யும் வேலையினை அதை விடத் துல்லியமாக ஒரே கணினி செய்கிறதல்லவா? அதே போல் ஆயிரம் கணினிகளுக்கான கட்டளைகளை அளித்து பணி முடிக்கும் திறன் செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமாக்கப்படும். அப்படியென்றால் மனிதர்களுக்கு வேலை? அங்குதான் வருகிறது பிரச்சனை.

 artificial intelligence

அறிவியல், தொழில்நுட்பம்

தொழில்நுட்பத் துறையில் கடைசியாகப் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இந்தியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 50 வருடங்களில் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் எத்தனை பேர்? வெறும் 5 நபர்கள். அதிலும் அறிவியலில் இரண்டு மட்டுமே. மருத்துவத்தில் ஒன்று. இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் எல்லோரும் வெளிநாட்டுவாழ் இந்தியர்.

அப்படியென்றால் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லையா? இல்லை என்பதே பதில். இந்தியாவில் இருப்பதெல்லாம் தொழில்நுட்பம் மட்டுமே. அறிவியலைப் பயன்பாட்டுக்கு எளிமையான வடிவில் கொண்டுவர செய்யப்படும் ஒரு யுக்தியே தொழில்நுட்பம். அறிவியல் புதிய சித்தாந்தங்களை உருவாக்குவது. அதற்குரிய கல்வி இங்கு இல்லை என்பதே நிதர்சனம்.

கல்வியா ? பயிற்சியா ?

நாம் இன்னும் ஆரம்பப் பள்ளிக்கு லட்சக்கணக்கில் வசூலிக்கும் பள்ளிகளையே நல்ல கல்வி அளிக்கும் இடங்கள் என நினைக்கிறோம். மதிப்பெண்களை நம்பிய கல்வி. பயிற்சி சார்ந்த கல்விமுறை. கொடுக்கப்பட்ட வேலைகளுக்குத்  தகுந்தாற்போல் பணிபுரியும் பயிற்சியை மட்டுமே இவை அளிக்கிறது. இன்று பல தொழில்நுட்பக் கல்லூரிகள் அந்த பயிற்சியினைக் கூட மாணவர்களுக்கு அளிப்பதில்லை.

 quality education

அறிவியலில் வளர்ச்சி என்பது மாணவர்களின் சிந்தனைகளைத் தூண்டுவதிலேயே இருக்கிறது. கல்விச்சுமை இளம் சமுதாயத்தினரை அழுத்துகிறது. புதிய உயரங்களை அடையவிடாமல் அவர்களை கீழே இழுக்கிறது. சிந்திப்பதற்கான களத்தை மாணவர்களுக்கு ஒதுக்கினால் மட்டுமே எதிர்கால உலகத்தோடு நம்மால் போட்டி போட முடியும். மதிப்பெண்களை மட்டுமே நம்பும் நம் மாணவர்கள் கருத்தியல் ரீதியாக அறிவியலைப் புரிந்து கொள்ளும் காலமே இந்தியாவின் பொற்காலமாக இருக்கும். பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் தங்களது கல்வி சார்ந்த நிலைப்பாட்டினை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 

SHARE