
நடிகை தேவயானி தன் திரையுலக வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’மும்பையில் இருந்து வந்த எனக்கு பேரும், புகழும் கொடுத்தது தமிழகம் தான். நமது கையில் எதுவும் இல்லை. இங்கு எனக்கு, இவ்வளவு அன்பும், பாசமும் கிடைக்கும்; இவ்வளவு அதிக படங்கள் செய்வேன்னு எதிர்பார்க்கவே இல்லை.
எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, 100 சதவீதம் உண்மையாக செய்தேன். அதற்கு மேல், கடவுள் கொடுத்தது தான் இது… நடிகர் அஜித்துடன், காதல் கோட்டை படத்தில் நான் நடித்ததை எப்போதும் மறக்க முடியாது. இப்ப கூட, நான் எங்கு சென்றாலும், அந்த படத்தின் கேரக்டர் பெயரான, ‘கமலி’ என்று தான், பலரும் என்னை கூப்பிடுகின்றனர்.
அதுபோல, சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்களும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நடிகர்கள் விஜய், சரத்குமார், முரளி, பார்த்திபன், மம்மூட்டி போன்றோருடன் பல படங்களில் நடித்துள்ளேன். அஜித், விஜய்க்கு, ரசிகர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. இவ்வளவு வருடமாக சினிமாவில் இருக்க வேண்டும் என்றால், தனித்திறமை வேண்டும்; அடையாளம் வேண்டும்; உழைப்பு, கடுமையான முயற்சி எல்லாம் அவசியம். அவர்கள் இருவரிடமும் அது இருக்கிறது.

என்னமோ தெரியவில்லை, ரஜினியுடன் சேர்ந்து நடிக்க, இதுவரை வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ‘நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்; கிடைக்காமல் போவதற்கு, ஏதாவது ஒரு காரணம் இருக்கும்’ என, நினைத்துக் கொள்வேன். ‘எல்லாம் கடவுள் செயல்’ என்று தான் நினைத்துக் கொள்வேன்.என் கணவர், இயக்குனர் ராஜ்குமார், என்னை அவ்வளவு அழகாகப் பார்த்துக் கொள்கிறார்.
மகள்கள், இனியா, ஒன்பதாவது படிக்கிறார்; பிரியங்கா, ஏழாவது படிக்கிறார். உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துகிறேன். குறைவாக சாப்பிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். நன்றாக உழைக்கிறேன். சும்மா இருப்பதே இல்லை. அதனால், 20 ஆண்டு களுக்கு முன் பார்த்தது போலவே, இப்போதும் இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.