‘இவள எவளவோ கஷ்டப்பட்டுப் படிக்கவைச்சு டீச்சராக்கினனான். கடைசி யில இவள் பள்ளிக்கூடத்தில போய் தானும் தண்டபாடும் என்று நடக்காம முப்பத்திரண்டு வயசு ஆகியும் கலியாணம் கட்டாம ஏதோ தான் மட்டுமே பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிற மாதிரி எந்த நாளும் பொழுது சாயேக்கத்தான் வீடு வருகிறாள். ஒழுங்கா மத்தியான சாப்பாடு சாப்பிடுறதுமில்லை. இவளிண்ட அப்பாவும் மூட்டை தூக்கி உழைக்கிற காசெல்லாம் குடி குடியென குடிச்சு இப்ப பாரிசவாதம் வந்து படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார். எனக்குத் தங்கத்தில் தாலி போடவில்லை என்றாலும்; மஞ்சள் கயிறால தாலி கட்டினார் என்பதற்காக இப்ப ஆக்கிப்போடுறன். இவள் உழைக்கிற காசுல கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடிச்சு வைச்சிருந்தா இப்ப பத்து லட்சம் தேறியிருக்கும். அந்த பணத்தைக் கொடுத்துக் கிடுத்து தோட்டக்காரன் தரணிக்குச் சரி பேசி கட்டிக்கொடுத்திருக்கலாம். இவள் என்னவென்றால், கட்டறுத்த ஆட்டுக்குட்டி மாதிரி பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறன்; படிப்பிக்கிறனென்று பள்ளிக்கூடத்திற்கு விடிஞ்சும் விடியாத பொழுது ஓடிப்போய் என்னத்தைப் பிடிங்கினாள்?. எனக்கும் அறுபது வயசாகிறது. இவள் எவ்வளவு காலந்தான் இப்படி துணையில்லாம தனியாக இருக்கப் போறாள். இந்த கண்டறியாத போரினால், என்ர மூத்த மகன் மதியும் காணாமல் போய்ப் பத்து வருசமாச்சு. அவன் இப்ப இருக்கானோ, இல்லையோ தெரியாது?. இன்றைக்கு அவன்ர முப்பத்தெட்டாவது பிறந்த நாள். பாவம் பிள்ளை எங்க எப்படியிருக்கோ தெரியாது?. கோவிலுக்குப் போய் அவனுக்கு அர்ச்சனை செய்திட்டு வருவம்’ ரஞ்சிதா ஆசிரியரின் தாய் சிவ காமி புறுப்புறுத்துக்கொண்டு வலக்கையால், கிழிந்த ஓலைப் பாயைச் சுற்றியவாறு இடக்கையால் அரிதட்டாய்ப் போன போர்வையைச் சுருட்டியவாறு கண்களைச் சிமிட்டியவாறு வீட்டு வாசற் பக்கம் பார்வையைச் சிதறவிடுகிறாள்.
பாடசாலைக்குச் செல்ல, சேலை கட்டி ஆயத்தமாகிய ரஞ்சிதாவை நாவற்பழத்தைச் சுற்றி எறும்புக் கூட்டம் மொய்த்த மாதிரி ஆண் காவற்துறையினரும் பெண் காவற்துறையினரும் விசாரணை மேல் விசாரணை நடத்தி தங்கள் அதிகாரத்தைக் காட்டினார்கள். நூறு மீற்றர் தூர த்தில் உள்ள சிவகாமியம்மையின் காதுகளுக்கு அவர்கள் வாதாடிக் கொண்டிருப்பது எதுவும் தெளிவாக வந்து விழவில்லை. ஏதோ தன்னுடைய மகளிடம் காவற்துறையினர் கேட்பது போல அவளுக்கு இருந்தது. தடித்த கறுத்த ஒரு பெண் காவற்துறை அதிகாரி திடீரென்று ரஞ்சிதா ஆசி ரியரின் கரங்களில் விலங்கினை மாட்டி, ஆசிரியர் ‘இல்லை இல்லை’ கதற கதற இழுத்துச் சென்று, ‘ஜீப்’ வண்டியில் ஏற்றினாள்.
‘அம்மா ரஞ்சிதா உண்ட நல்;ல மனசுக்கு என்னவம்மா இப்படியெல்லாம் நடக்குது. ஊரே எங்கள பார்த்து தப்பா கதைக்கப் போகுது. இந்த பொலிஷ்காரர்களுக்கு என்ன வேண்டுமாம்? ஒழுங்கான ஆம்பளை இல்லாத வீடுணு இடம் கண்டுட்டாங்களா?’ முணுமுணுத்தவாறு வாசற் படியைத் தாண்டி படலை அடிக்கு தள்ளாத வயதிலும் ஓடோடி வந்தாள். அரைவாசி சுற்றிய பாயும் கால்வாசி சுருட்டிய போர்வையும் ஏதோ கதை சொல்ல அழைத்தது போல அவற்றின் மேல் ‘மியா மியா’ எனக் கத்தியவாறு கறுத்த பூனையொன்று ஓடிவந்து படுத்துக் கொண்டது. பக்கத்து அறையில் ஒரு ஜீவனின் உயிர் கொஞ்சம் கொஞ்சம் போய்க் கொண்டிருந்தது. முற்றத்தில் தனித்து நின்ற மாமரத்திலிருந்து செத்த காகம் நிலத்தில் விழ உயரத்தில் ஒரு பருந்து வட்டமிடுகின்றது. இவர்களின் வளர்ப்பு நாய் வானத்தைப் பார்த்து ஊளைவிடுகின்றது. மகள் அர்ச்சனைக்காக பிடிங்கி வைத்த செவ்வரத்தைப் பூக்களும் மல்லிகைப் பூக்களும் செவ்வந்தி பூக்களும் அரலிப் பூக்களும் நந்தியா வட்ட பூக்களும் அர்ச்சனைத்தட்டில் வாடுகின்றன. அப் பூக்களில் வந்து அமர்ந்த வண்டு ஒன்று ஏமாற்றத்துடன் பறக்கின்றது. இவை எதுவும் சிவகாமியின் கண்களுக்குத் தென்படவுமில்லை; காதுகளுக்குக் கேட்கவுமில்லை.
‘ஜீப்’ வண்டி கடுகதியில் சிவகாமியின் கண்களிலிருந்து மறைகின்றது. தாய்க்கு ஏதோ நாடகம் பார்த்தது போல் இருக் கின்றது. இரு கரங்களினாலும் தலையில் அடித்து அடித்து ‘உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் எவ்வளவு?. வீடு வீடா பாத்திரம் தேச்சி வாசற்கூட்டி உன்னை படிப்பிச்சி டீச்சராக்கினனான். இண்டைக்கு கண்ட கண்ட நாய் களுக்கிட்ட பேச்சி வாங்கிறாய்’ முழங்காலில் இருந்தவாறு அழுகின்றாள். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. வீதியால் செல்பவர்கள் எல்லோரும் வேடிக்கைப் பார்த்து செல்கின்றனர். மழைத்துளிகள் இடையிடையே விழத் தொடங்குகின்றன. ஆசி ரியரின் கைப்பையும் பாடத்திட்டக் கொப்பியும் பாடக் குறிப்புக் கொப்பியும் வீதியில் கிடந்து நனைகின்றன. வீதியால் நடந்து பாடசாலைக்குச் சென்ற ரஞ்சிதா ஆசிரியரின் வகுப்பு மாணவன் இவை தன்னுடைய ஆசிரியருடைய பொருட்கள் என்பதை அடையாளம் கண்டு அவற்றை எடுத்து சிவகா மியிடம் கொடுத்தான். அவளின் கண்ணீர்த் துளிகள் இன்னும் அதி கம் நனைத்தன.
‘என்ன அம்மா இண்டைக்கு டீச்சர் பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டாவா?’
‘தம்பி நீ பத்திரமா போ அவள் வருவாள்’
‘இண்டைக்கு, நான் தமிழ்த்தினப் போட்டியில் சிறுகதைக்கு அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்றதால், பரிசு வாங்க கொழும்புக்குப் போறன். என்னை வழிநடத்தி வளர்த்த ஆசிரியருக்கிட்ட ஆசீர்வாதம் பெற வேண்டும். கட்டாயம் பள்ளிக்கூடத்திற்கு வரச் சொல்லுங்கோ. பத்து மணிக்கு பஸ் புறப்படுதாம் அதிபர் சொல்லி விட சொன்னார்’
‘தம்பி, மகள் கடைக்குப் போய்ட்டாள் வந்ததும் சொல்றன் எனக்கு டவுணுக்குப் போய் வர நூறு ரூபாய் காசு கடனாகக் கொடு அவள் டவுணால வந்ததும் திருப்பித் தாறன்’
பத்தாம் வகுப்பாசிரியராக கடமையாற்றும் ரஞ்சிதா ஆசி ரியரின் மாணவர்களில் முதன்மை மாணவன்தான், முகுந்தன். இவன் படிப்பிலும் புறச் செயற்பாடுகளிலும் மாதா பிதா குரு பக்தியிலும் தலை சிறந்தவன். இவனின் தந்தை விறகு வியாபாரியாக துவிச்சக்கர வண்டியில் வீடு வீடாக கடை கடையாக வலம் வருவார். பள்ளிக்கூட வாசலே அறியாத தாய், இவனுக்கு அடுத்துப் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுடன் நாளொரு வண்ணமும் பொழு தொரு மேனியும் போராடினாள். தந்தையின் உழைப்பில் முகுந் தனை அந்த குடும்பத்தினால், படிப்பிக்க முடியவில்லை. ரஞ்சிதா ஆசிரியர், அவனது படிப்புச் செலவை முழுமையாக பொறுப்பேற்றிருந்தாள். இந்த விடயம் அவனுக்கும் ஆசிரிய ருக்கும் மட்டுமே தெரியும். முதற் தடவையாக ஆசிரியரின் வீட்டுக்குள் சென்ற முகுந்தன் வீட்டையும் உயிருக்குப் போரா டிக் கொண்டிருந்த அப்பாவையும் இன்றோ நாளையோ என்று இருக்கும் அம்மாவையும் பார்த்துத் திகைத்துப் போனான். ஆசிரியரின் தாய் பணம் கேட்டது அவனைத் திகைப்புடன் இன்னும் தூக்கிவாரிப் போட்டது. தனக்குக் கொழும்புக்குப் போவதற்கு நேற்று ஆசிரியர் கொடுத்த முந்நூறு ரூபாயில் நூறு ரூபாயைத் தனது சட்டைப் பையிலிருந்து மெதுவாக இழுத்து, மௌனம் மீது காதல் கொண்டவன் போல அந்த ஏழைச் சிறுவன், ஏழைத்தாயிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகின்றான். அன்றைய தினம் ஆசிரியரின் ஆசீர்வாதம் பெறாமல் தனது பயணத்தைத் தொடர்ந்தது அவனுக்கு யானைக் காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல கவலையையும் வேதனை யையும் வாட்டி வதக்கின. இருந்தும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மேடையில் பரிசு பெறும் போதும் தனது குருவைப் பார்க்காமல் வந்துவிட்டேனே என்ற ஏக்கம் அவன் மனதில் நிழலாடியது. இவனை வறுமை வாட்டியபோதும் கல்வியை நேசித்தான். அதுவே இவனுக்கு எதிர்கால ஆயுதமாகும் என்பதை அறியத் தவறவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட ஆசிரியைப் பதற்றத்துடன், கூண்டில் ஏறி னாள். எதிர்கூண்டில் அவரது வகுப்பு மாணவன் தனிஷ் தலையில் காயத்திற்குப் பத்துக் கட்டியவாறு கபடப் புன்னகையுடன், குனிந்த தலை நிமிராதவாறு ஏறினான். காவல்துறையினரிடம் ‘நான் அப்படி ஆளில்லை’ கெஞ்சி மன்றாடியும் காவற்துறையினர் எதையும் நம்பாது இரவு முழுவதும் காவல் நிலையத்தில் கூண்டில் அடைத்து வைத்து, கலியாணம் ஆகாத பெண் ஆசிரியை என்று கூட யோசிக்காமல் மாற்று ஆடைக்கூட கொடுக்காமல் ஆண் காவற்துறையினரும் பெண் காவற்துறையினரும் மாறி மாறி தங்கள் கைவரி சையைக் காட்டினார்கள். இடையி டையே மதுபோதையில் வந்த காவற்துறையினர் சிலர் ஆசிரியை யைத் தப்பான கண்ணோட்டத்தில் நோக்கியதுடன், துஷ்பிரயோகத்தில் ஈடுபடவும் எத்தனித்தனர்.
நீதிமன்றத்தில் சிறிய நேரம் நிசப்தம் நிலவுகின்றது. நீதிபதி உள்ளே வந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் எழுந்து நின்றனர்; அமர்ந்தனர், மாணவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்ததும் நீதிபதி எதுவும் கதைக்காமல் ஆசி ரியர் மீது நாற்பத்தைந்து நாள் சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் நஸ்ட ஈடும் ஒரு வருடத்திற்கு ஆசிரியர் சேவையிலிருந்து நீக்கப் பட்டுள்ளார் எனவும் நீதிபதி விசாரணை எதுவும் நடத்தாமல் தனது தீர்ப்பை வரைந்து செப்பினார். ‘இல்லை நான் அப்படியில்லை. இந்த மாணவன் ஏதோ காரணத்திற்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றான். நீதிபதி அவர்களே! தீர விசா ரணை செய்து தீர்ப்பை எழுதுங்கள்’ கெஞ்சினார், ஆசிரியர். இதை நீதிபதியோ, வழக்கறிஞரோ செவி சாய்த்துக் கொள்ளவில்லை.
சிறுவன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, தான் பெற்றோரிடமிருந்து தப்பிக் கொள்ள எதுவும் அறியாத அப்பாவி ஆசிரியரை சிக்கலில் சிக்கவைத்தான், தனிஷ். இலங்கையில் காவல்துறையினரும் நீதித்துறையினரும் இப்படி கண்மூடித்தனமான தீர்மா னங்களை நான் என்ற ஆணவத்தில் எடுத்தால்தான், சமூக அக்கறை கொண்ட எத்தனையே மனிதர்கள் தங்களின் கடமை களைச் சரிவர ஆற்றாமல் தானும் தன்பாடுமாக வாழ்கின்றனர். விசாரணையில்லாமல் காவற் துறையாலும் நீதித்துறையாலும் அதிபர், ஆசிரியர் செய்யாத குற்றத்திற்காக சிறைகளில் வாடு வதால், மாணவர் மத்தியில் குரு பக்தி குறைவடைவதுடன், கல்வியும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைகின்றது, மாணவர்கள் சிலரது தவறான செயற்பாட்டினால், கல்விச் சமூகம் பாதிப்படைகின்றது.
(எழுத்தாளர் புயல் ஸ்ரீகந்தநேசன்)
தொடரும்…